மீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்
9 செப்டம்பர், 2015

உங்களுக்கு பீனிக்ஸ் பறவையின் கதை தெரியுமா? பண்டைய புராணத்தில் இந்த பீனிக்ஸ் பறவையைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. தங்கத்தால் ஆன உடலைக் கொண்ட இந்தப் பறவை நூற்றுக்கணக்கான வருடங்கள் வரை உயிர்வாழும். வயதுபோய் உடலெல்லாம் சோர்ந்து இறக்கும் தருவாயில், தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். பின்னர் அந்தச் சாம்பலில் இருந்து மீண்டும் இளமையாக உயிர்பெற்று வரும். இது ஒரு வாழ்க்கை வட்டமாக தொடரும்.

இப்படியான புராணக்கதைகளில் வரும் விசித்திர விடயங்கள் நம் வாழ்வில் அடிக்கடிப் பார்க்கமுடியாதவை. அதிலும் தன்னைத் தானே தீவைத்து, எரிந்து முடிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்பெற்று வரும் பீனிக்ஸ் பறவைகளை நாம் நிஜ வாழ்வில் பார்க்கவே முடியாது! ஆனால் இந்தப் பிரபஞ்சம் பற்பல ஆச்சரியங்களையும் புதிர்களையும் கொண்டுள்ள மாபெரும் கட்டமைப்பு. விண்ணியலாளர்கள் வானில் ஒரு பகுதியை அவதானித்துள்ளனர். நீண்ட காலமாக இறந்துவிட்ட பகுதி என அறியப்பட்ட வானின் ஒரு பகுதி மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளது! பீனிக்ஸ் பறவையைப் போலவே!

பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த உண்மையான விசித்திரக் கதை தொடங்கியது. மிகப்பெரிய கருந்துளை ஒன்று உருவாகியபோது பாரிய சக்தியை வெளியிட்டுக்கொண்டு அது உயிர்பெற்றது. அதனைத் தொடந்து மிகச் சக்திவாய்ந்த கதிர்வீச்சுக்களை ஜெட் போல அது வெளியிட்டுக்கொண்டே இருந்தது. இந்த சக்திவாய்ந்த ஜெட்கள் அசூர வேகத்தில் கதிர்வீச்சு மற்றும் வாயுக்களை வீசி எறிந்ததால், இந்த வாயுக்கள் ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவுவரை படர்ந்து சென்று பிரகாசமான முகில்போல தோற்றமளித்த்தது.

அதன்பின்னர் பல மில்லியன் வருடங்களுக்கு இந்தப் பிரகாசமான முகில் போன்ற அமைப்பு வானில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது. ஆனால் இதனை கண்களால் பார்க்க முடியாது, ஏனென்றால் இது “கட்புலனாகும் ஒளியாக” ஒளிரவில்லை, மாறாக இது “ரேடியோ கதிர்வீச்சாக” ஒளிர்ந்தது (ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் இவற்றை அவதானிக்க முடியும்). ஒரு கட்டத்தில் இந்த மேகங்களில் இருந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து, பிரகாசிக்கும் தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாதுபோய் இறுதியில் அந்த இடமே இருளில் மூழ்கிவிட்டது.

ஆனால் இந்த விசித்திரக் கதை இங்கு முடியவில்லை...

பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பாரிய சக்திவாய்ந்த நிகழ்வொன்று இந்த முகில்க் கூடத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இரண்டு விண்மீன்பேரடைகளின் கொத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதியபோது இந்தப் பாரிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த சக்திவாய்ந்த மோதல், பெரிய அதிர்வலையை உருவாக்க அந்த அதிர்வலைகள் இந்த மேகம் போன்ற அமைப்பில் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது. இந்த அதிர்வினால் மேகங்கள் கலையாமல், மாறாக மீண்டும் இவை ரேடியோ கதிர்வீச்சில் ஒளிரத்தொடங்கி விட்டது. ரேடியோ பீனிக்ஸ் மீண்டும் உயிர்பெற்றுவிட்டது.

மீண்டும் உயிர்பெற்ற பீனிக்ஸ் மேகத்தை மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். பச்சை நிறத்தில் மையத்திற்கு சற்றுத் தள்ளி இருக்கும் அமைப்பே இந்த மீண்டும் உயிர்பெற்ற பீனிக்ஸ் அமைப்பாகும்.

ஆர்வக்குறிப்பு

விண்ணில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ரேடியோ கதிர்வீச்சை வெளியிடுகின்றன. ஆனால் இவை இப்படியான ரேடியோ கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்று 1932 வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

This Space Scoop is based on a Press Release from Chandra X-ray Observatory .
Chandra X-ray Observatory

Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்