கட்புலனாகாத காந்தப்புலப் பிரபஞ்சத்தின் வரைபடம்
12 மே, 2021

ஒரு தொகுதி விண்மீன் பேரடைகளை ஆய்வு செய்வதற்கு விண்ணியலாளர்கள் புதியவொரு நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இப்புதிய நுட்பம் பேரடைகள் பற்றி இதுவரை நாமறிந்திராத பல புதிய விடையங்களை நமக்கு சொல்லப்போகிறது.

விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் கருந்துளையில் இருந்து வெளிவரும் உயர் ஆற்றல் கொண்ட துகள்களின் தாரை (jet) பற்றி உங்களுக்கு தெரியுமல்லவா? இந்த தாரைகள் விண்மீன் பேரடை குழுக்களுக்குள் இருக்கும் கட்புலனாகாத காதப்புல வரைபடமொன்றை எமக்கு காட்டுகிறது. ஒரு விண்மீன் பேரடை குழுவில்/கொத்தில் (cluster) இருக்கும் மிகப் பிரகாசமான பேரடையின் மையத்தில் இருக்கும் கருந்துளையில் இருந்துவரும் தாரையில் மிகத் தெளிவாக இந்த வரைபடம் இருக்கிறது!

விண்மீன் பேரடைக் கொத்துக்கள் கரும்பொருள் (dark matter, இவற்றை எம்மால் நேரடியாக அவதானிக்கமுடியாது. அதற்கு அருகில் செல்லும் ஒளியை கொண்டே அவதானிக்கமுடியும்.) மற்றும் வெப்பமான பிளாஸ்மாவால் உருவானவை.

பேரடைக் கொத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது அதிர்வலைகள் உருவாகும். இந்த அதிர்வலைகள் கொத்தில் இருக்கும் பிளாஸ்மாவை அங்குமிங்கும் அசைக்கும் (இப்படி உருவாகும் அதிர்வுகளை வில் அதிர்ச்சி என அழைக்கின்றனர்). இந்த அசைவு கொத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளைச் சுற்றி மறைந்திருக்கும் காந்தப்புலத்தை நெருடுவதால் அவ்விடங்களில் "காந்தப்புலச் சுவர்" உருவாகும். இக்காந்தப்புலச் சுவர்களை  அவதானிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். எனவே இக்காந்தப்புலச் சுவர்களில் ஏதாவது இடைவினைகள் ஏற்படும் வரை விண்ணியலாளர்கள் காத்திருந்தனர். அப்படியான மாற்றம் நிகழும் வேளையில் இந்தச் சுவர்களை மறைமுகமாக அவதானிக்கமுடியும்.

இந்த இடைவினைகளை அவதானிப்பது என்பது கடினமான காரியம், எனவே இந்தக் காந்தப்புல சுவர்களைப் பற்றி ஆய்வு செய்வதும் சிரமமான காரியமே. ஆனால், அதிஷ்டவசமாக, கருந்துளைகளில் இருந்துவரும் தாரை உருவாக்கும் வரைபடம் கொண்டு இந்தச் சுவர்களை அவதானிப்பது சற்றே இலகுவாகியிருக்கிறது.

தென்னாபிரிக்காவில் இருக்கும் காரு பாலைவனத்தில் உள்ள MeerKAT ரேடியோ தொலைநோக்கியை பயன்படுத்தி Abell 3376 கொத்தில் இருக்கும் MCR 0600-339 எனும் பிரகாசமான விண்மீன் பேரடையை விண்ணியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர். (இது பூமியில் இருந்து 600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது!)

இந்தக் கருந்துளையில் இருந்துவரும் தாரையின் முடிவு பார்பதற்கு சற்றே விசித்திரமாக இருக்கிறது. அதாவது இந்த தாரை விண்மீன் பேரடையைச் சுற்றியிருக்கும் காந்தப்புலச் சுவரில் முட்டிமோதுகிறது. இதனால் பார்ப்பதற்கு இப்படியாக தெரிகிறது. குழாயில் இருந்துவரும் நீர் ஒரு கண்ணாடிச் சுவரில் பாய்ந்தால் எப்படியிருக்குமோ அப்படி.

இப்படி அவதானிக்ககூடியதாக இருக்கும் இடைவினைகள் எப்படி காந்தபுலம் விண்மீன் பேரடைகளுக்கிடையில் தொழிற்படுகிறது என்று அறிந்துகொள்ள ஒரு படிக்கல்லாக இருக்கும். 

படத்தின் இடப்பக்கத்தில் MRC 0600-399 விண்மீன் பேரடையில் இருந்துவரும் தாரையை MeerKAT தொலைநோக்கி மூலம் அவதானித்த படம். வலப்பக்கத்தில் ATERUI II சுப்பர்கணணியை பயன்படுத்தி அதே செயன்முறையை உருவகப்படுத்தி பார்த்தபோது.

படவுதவி: Chibueze, Sakemi, Ohmura et al. (MeerKAT image); Takumi Ohmura, Mami Machida, Hirotaka Nakayama, 4D2U Project, NAOJ (ATERUI II image)

ஆர்வக்குறிப்பு

காந்தச் சுவர்களை உருவாக்கக்கூடிய ஒன்றுடன் ஒன்று மோதும் பிளாஸ்மா அதிர்வுகளை "வில் அதிர்வுகள்" என விண்ணியலில் அழைக்கின்றனர். நீரில் படகு ஒன்று பயணிக்கும் போது நீரோட்டம் படகைச் சுற்றி வில் போல வளைந்திருப்பதை போலவே என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். விண்மீன் கொத்துக்களின் இடையில் மட்டுமின்றி வில் அதிர்வுகள் பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் இடம்பெறுகிறது. உதாரணமாக பூமியின் காந்தப்புலக் கோளத்தில் சூரியப் புயல் மோதுவதாலும் பூமியைச் சுற்றி வில் அதிர்வு உருவாகிறது.

This Space Scoop is based on a Press Release from NAOJ .
NAOJ

M Srisaravana, UNAWE

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்