பிருத்தானிய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்
16 டிசம்பர், 2015

நமது பூமி, அதனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான உலோக செய்மதிகளால் மூடப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்புக்களை வழங்குவதில் இருந்து, காலநிலையை எதிர்வுகூறுவது வரை, ஒவ்வொரு செய்மதிக்கும் தனித்துவமான தொழிற்பாடு உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு செய்மதி – சர்வதேச விண்வெளி நிலையம் சிறப்பு மிக்க ஒன்று. மனிதன் உருவாக்கிய செய்மதிகளில் மிகப்பெரிய செய்மதி இதுவாகும், மேலும் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரே செய்மதி இது மட்டுமே!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (பொதுவாக ISS [International Space Station] என அழைக்கப்படும்) 10 பேர் வரை ஒரே நேரத்தில் தங்க முடியும். தற்போது அங்கே 6 ஆய்வாளர்கள் தங்கி அங்கிருக்கும் ஆய்வுகூடத்தில் வேலை செய்கின்றனர். அந்த ஆறு பேரில் ஒருவர் பிருத்தானியாவைச் சேர்ந்த Major Tim Peake, இவர் கடந்த 20 வருடங்களில் விண்வெளிக்குச் செல்லும் முதலாவது பிருத்தானியராவார்.

நேற்று, சோயுஸ் விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு சென்ற Tim, எட்டு மணித்தியாலங்களின் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். ISS ஐ அடையும் போது சில கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், திறமை வாய்ந்த குழு சிக்கல்களை களைந்து வெற்றிகரமாக ISS இல் நுழைந்தனர்.

Tim இனி அவரது வேலையைத் தொடங்குவார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரது தனிப்பட்ட திட்டமான Principia என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்துவார். Principia என்ற பெயர் ஈர்புவிசையைக் கண்டறிந்த புகழ்வாய்ந்த பிருத்தானிய விஞ்ஞானியான ஐசாக் நியுட்டன் எழுதிய புத்தகத்தின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பகுதியாக, ஒரு டஜன் பரிசோதனைகளை பூமியில் இருக்கும் ஆய்வாளர்கள் சார்பாக Tim மேற்கொள்வார். இரத்தக் குழாய்களை வளர்ப்பது, சிரமமான வேளைகளில் எப்படி மூளை தொழிற்படுகிறது, மற்றும் புதிய உலோகம் ஒன்றை உருவாக்குதல் என்பன அவற்றுள் சில.

எதிர்காலத்தில் சூரியத்தொகுதியை ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றியும் Tim ஆய்வுகளை செய்வார். இந்த ஆய்வில், பூமியில் இருக்கும் ரோபோக்களை விண்வெளியில் இருந்து Tim கட்டுப்படுத்துவார். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கு ரோபோக்களை, செவ்வாயைச் சுற்றிவரும் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் கட்டுப்படுத்தலாம்.

ஆர்வக்குறிப்பு

ஜீரோ ஈர்ப்புவிசையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல் சிரமமான காரியமாகும். எழுந்து நிற்கவோ, எவற்றையாவது தூக்க முடியாது என்கிற கட்டாயம் இருக்கும் போது, திடமான நிலையில் உடலைப் பேணுதல் கடினமான விடயம். ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க Tim சர்வதேச விண்வெளி நிலையத்தில் மரதன் ஓட இருக்கிறார் – அதாவது 42 கிமீ!

This Space Scoop is based on a Press Release from ESA .
ESA

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்