பிரபஞ்சச் சமையல்
7 ஜனவரி, 2016

பிரபஞ்சத்தில் நடைபெறும் சமையல் என்பது, நம் வீட்டில் சமைப்பது போலவே; சரியான சேர்மானங்களை (மா, பால், முட்டை) சரியான முறையில் சேர்த்தால் (சூடான சமையல்ப் பாத்திரம்), அருமையான ருசியான ஒன்று இறுதியில் கிடைக்கும் (அப்பம்)!

இந்தப் பிரபஞ்சமும் இப்படியாகத்தான் பிரபஞ்சப் பொருட்களை சமைக்கிறது. உயிர்கள், கோள்கள் மற்றும் நாம் பார்க்கும் அனைத்திற்குமே மூல காரணி அல்லது சேர்மானமாக இருப்பது மூலக்கூறுகளே. ஆனாலும் மூலக்கூறுகள் முதலில் உருவாகவேண்டியது அவசியம்.

மூலக்கூறுகள், அணுக்கள் எனப்படும் சிறிய துணிக்கைகளால் உருவாக்கப்பட்டவை. உதாரணமாக, நீர் என்பது இரண்டு ஹைட்ரோஜன் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து உருவாகிய மூலக்கூறு. ஆனால் இந்த மூலக்கூறுகள் எல்லா இடத்திலும் உருவாகுவதில்லை. சுவையான சமையலுக்கு எப்படி சரியான வெப்பநிலை அவசியமோ, அதனைப்போலவே, மூலக்கூறுகள் உருவாவதற்கு சரியான வெப்பநிலை அவசியம்.

விண்மீன்களுக்கு அருகாமையில் வெப்பநிலை மிகவும் அதிகமாகையால் சில மூலக்கூறுகள் அங்கு உருவாவதில்லை. அதேபோல விண்மீன்களுக்கு மிகத்தொலைவில் வெப்பநிலை மிகமிகக் குறைவாகையால் அங்கும் சில மூலக்கூறுகள் உருவாவதில்லை. அதற்குக் காரணம் மூலக்கூறை உருவக்கத்தேவையான அணுக்கள் உறைந்து விடுவதாலாகும்.

ஆகவே வேறுபட்ட மூலக்கூறுகளை, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு கண்டறியலாம் என்று தெரிந்துகொள்ள, விண்ணியலாளர்கள் புதிதாக உருவாகிய விண்மீன் ஒன்றை அவதானிக்கின்றனர். இந்த விண்மீனைச் சுற்றி வாயுக்களும், பிரபஞ்சத்தூசியும் வளையமாகச் சூழ்ந்துள்ளது. இவை பின்னொரு காலத்தில் கோள்களாக மாறும்.

இந்த விண்மீனைச் சுற்றியுள்ள வாயுவாலான வளையத்தை அவதானிக்கும்போது, குறித்த இடத்தில், சரியான வெப்பநிலை இருக்கும் பகுதியில் பல்வேறுபட்ட மூலக்கூறுகள் உருவாகியிருப்பதை கண்டறிய முடிந்தது. ஆனாலும் அதனைவிட ஆச்சரியமான விடயம், இந்த மூலக்கூறுகளால் ஆன வாயுவால் உருவாகிய இன்னொரு வளையம் இந்த விண்மீனைச் சுற்றி வெகு தொலைவில் வளையமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததே. இந்த இரு வளையங்களையும் படத்தில் நீங்கள் காணலாம்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதிலென்ன பெரிய விடயம் இருக்கிறது என்று எண்ணத்தோன்றும். ஆனால், விண்ணியலாலர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய விடயம். இது நமக்குச் சொலல்வரும் விடயம், மூலக்கூறுகள், நாம் எதிர்பாராத இடங்களிலும் காணப்படலாம் என்பதாகும். மேலும் இந்த விண்மீனின் அவதானிப்பு, எமக்கு நம் சூரியத்தொகுதி பற்றி சில விடயங்களை வெளிப்படுத்தலாம், காரணம், சூரியனைச் சுற்றியும் இப்படியான ஒரு வாயு மற்றும் தூசியால் ஆன வளையத்தில் இருந்தே கோள்கள் உருவாகியது. 

ஆர்வக்குறிப்பு

மூலக்கூறுகளை நாம் பிரபஞ்சத் தூதுவர்கள் என்று அழைக்கலாம், காரணம் அவை எப்படி, எங்கு மற்றும் எப்போது உருவாகின என்று எமக்குச் சொல்லும். பூமியில் இருக்கும் நீர் மூலக்கூறுகள், நமது சூரியனைவிட வயதுகூடியவை!  

This Space Scoop is based on a Press Release from ALMA .
ALMA

Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்