ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?
24 ஆகஸ்டு, 2016

முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து ஆய்வுப்பயணத்தை சிலர் மேற்கொண்ட போது, பெரும்பாலானவர்கள் பூமி தட்டையானது என்றே கருதினர். மேலும் மேற்கு நோக்கி பயணப்படுபவர்கள், மிகவும் தொலைவு சென்றால், பூமியில் இருந்து வெறுமைக்குள் விழுந்துவிடுவர் என்றும் கருதினர்.

ஆனால் இன்று, நாம் பூமியின் எல்லாப் பகுதிகளையும் தெளிவாக ஆய்வுசெய்தது மட்டுமல்லாது, சூரியத் தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் பார்வையிட்டுள்ளோம். இந்தப் படிக்கல்லில் அடுத்து – சூரியத் தொகுதியையும் தாண்டி இருக்கும் உலகங்களை ஆய்வுசெயவதே.

1992 இல் முதன் முதலில், வேறொரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் ஒன்றைக் கண்டறிந்தோம். அதனைத்தொடர்ந்து இன்றுவரை, 3,300 இற்கும் அதிகமான பிற-விண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளோம். ஸ்டார் வார்ஸ், கார்டியன் ஒப் தி கலக்ஸி போன்ற விஞ்ஞான புனைக்கதைகளில் வரும் உலகங்களைவிட இந்த உலகங்கள் விசித்திரமானவை.

இவற்றில் சில, பூமியைவிட 9000 மடங்கு பெரியவை, சில நமது சந்திரனை விட சற்றே பெரியவை! சில இரும்பை உருக்கிவிடும் அளவிற்கு வெப்பமானவை, சில புளுட்டோவை விடக் குளிரானவை.

நாம் பாரிய விண்மீன்கள், இறந்த விண்மீன்கள், சிலவேளை விண்மீனே இல்லாமல் பேரடையில் தனியாக வலம்வரும் கோள்களைக் கூட அவதானித்துள்ளோம்.

இப்படியாக பலதரப்பட்ட கோள்கள் இருந்தாலும், எம்மை மிகவும் உற்சாகமூட்டும் கோள்கள், எமது பூமியைப் போன்ற கோள்களே. காரணம் இவற்றில் உயிரினங்கள் இருக்ககூடும்: பாறையால் ஆன கோள்களான இவற்றின் வெப்பநிலை அதன் மேற்பரப்பில் நீர் திரவநிலையில் இருப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

அப்படியான ஒரு கோள் இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது, அதுவும் நமது சூரியத் தொகுதிக்கு மிகவும் அண்மிய விண்மீனைச் சுற்றிவரும் கோள்!

புரோக்சிமா செண்டோராய் (Proxima Centauri) பூமியில் இருந்து வெறும் நான்கு ஒளியாண்டுகள் தொலைவிலேயே காணப்படுகிறது. ஆகவே இதனைச் சுற்றிவரும் பாறைக்கோள், எமக்கு மிகவும் அருகில் இருக்கும் பிற-விண்மீன் கோளாகும்.

இந்தக் கோள் எமது பூமியை விடச் சற்றே பெரியது, மேலும் சூரியனை புதன் சுற்றிவரும் தூரத்தை விட மிகக் குறைவான தூரத்தில் இது தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது. ஆனாலும், அதனது விண்மீன் நமது சூரியனை விட வெப்பம் குறைந்த விண்மீன் என்பதால், இந்தக் கோளின் வெப்பநிலை சரியான அளவில் இருக்கிறது.

ஆனால் உயிரினம் உருவாவதற்கோ, வாழ்வதற்கோ சரியான அளவாக இந்த வெப்பநிலை இருக்குமா? எமக்குச் சரியாக தெரியாது, ஆகவே இந்தக் கேள்விக்கான விடையைத்தான் தற்போது விண்ணியலாளர்கள் கண்டறிய ஆவலாக ஆய்வுகளை நடாத்துகின்றனர்.

ஆர்வக்குறிப்பு

இன்னும் 20 வருடங்களில் Proxima Centauri ஐ நோக்கி StarShot என்கிற விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

This Space Scoop is based on Press Releases from ESO , LCO .
ESO LCO

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்