கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்
20 ஜனவரி, 2017

இந்த வாரம் சனியில் இருந்து கேட்கும் கிசுகிசுப்பை அறிந்துகொள்ள பூமியின் எதிர்ரெதிர் புறங்களில் இருந்து (அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா) இரண்டு ரேடியோ உணரிகள் காத்திருக்கின்றன.

இந்த ஒவ்வொரு ரேடியோ உணரியும் பெரிய வீட்டின் அளவில் இருக்கும். இவை துல்லியமான கண்களைப் போல செயற்பட்டு, மிகச் சிறிய ரேடியோ அலைகளையும் உணர்ந்துகொள்ளும். கசினி விண்கலத்திடம் இருந்துவரும் இறுதி ரேடியோ செய்தியை அறிந்துகொள்ள இவை உதவுகின்றன.

1997 இல் பிரமாண்டமாக சனியை நோக்கி விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் கசினி. அன்றிலிருந்து இன்றுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் கசினி திட்டமும் உள்ளடங்கும்.

சனியைச் சுற்றிவரும் பல புதிய துணைக்கோள்களை கசினி கண்டறிந்ததுடன், சனியின் அழகிய வளையங்களின் வயதையும் கணிப்பிட்டது. அதேபோல சனியின் மர்மம் நிறைந்த துணைக்கோளான டைட்டானில் ஆராச்சிக்கருவி ஒன்றையும் தரையிறக்கியது.

அண்ணளவாக 20 வருடங்களுக்கு பிறகு கசினி இன்று தனது இறுதிச் சுற்றில் இருக்கிறது. வெகுவிரைவில் தனது எரிபொருளை கசினி தீர்த்துவிடும். இது நடந்தவுடன் (இந்தவருட செப்டெம்பர் மாதத்தில்), சனியை நோக்கி கசினி திசை திருப்பப்படும், சனியின் வளிமண்டலத்தில் எரிகற்களைப் போல கசினி எரிந்து சாம்பலாகும்.

அதுவரை, கசினியிடம் இருந்து வரும் தகவல், வியாழன், செவ்வாய் ஆகியவற்றின் சுற்றுப்பாதையைக் கடந்து அண்ணளவாக 1600 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து பூமியைவந்தடையும்.

கசினியின் இந்த வருடத்தின் முதலாவது செய்தி சனியின் பனித்துகள்களாலான வளையத்தைக் கடந்து வந்து பூமியை அடையும். வளையங்களின் ஆக்கக்கூறுகள், மற்றும் அவற்றின் வடிவம் பற்றிய விடயங்களை இந்தத் தகவல் கொண்டிருக்கும். இந்த வருடத்தின் பிற்பகுதியில், கசினி சனியின் மீது சமிக்ஜைகளை செலுத்தி எதிரொலிபோல சனியில் அது பட்டு தெறிப்படைந்து மீண்டும் பூமியை வந்தடையும்.

இப்படியாக எதிரொலிக்கப்பட்டு வரும் சமிக்ஜைகள் சனியின் வளிமண்டலம் மற்றும் வளையங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும். இதனைப் பயன்படுத்தி சனியின் வரலாற்றைப் பற்றி எம்மால் மேலும் அறிந்துகொள்ள முடியும்.

ஆர்வக்குறிப்பு

நீண்டகாலமாக சனியின் வளையங்களின் உருவாக்கம் பற்றிய சந்தேகங்கள் எமக்கு இருந்தன. சூரியத் தொகுதி உருவாகிய போதே இந்த வளையங்கள் உருவாகியதா? அல்லது பூமியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் சனியைச் சுற்றிவரும் ஒரு பனியால் உறைந்த துணைக்கோள் ஒன்று சனியின் ஈர்ப்புவிசையால் சிதைவடைந்ததால் இந்த வளையங்கள் உருவாகியதா? என்கிற சந்தேகத்திற்கான விடையை கசினி கண்டறிந்துவிட்டது. கசினியின் தகவல்ப்படி சனியின் வளையங்கள் மிக மிக பழமையானவை. 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சூரியனும் கோள்களும் உருவாகிய போதே இந்த வளையங்களும் உருவாகிவிட்டன.

This Space Scoop is based on a Press Release from ESA .
ESA

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்