கண்டத்தட்டுக்கள் வருடத்திற்கு 6 இன்ச் அளவு இடம்பெயருகின்றன. இந்த அசைவை GPS செய்மதிகளைக் கொண்டு எம்மால் கண்காணிக்க முடியும்.
‘பூமி போன்ற கோள்’ என்றால் என்ன?
வேறு விண்மீன்களை சுற்றிவரும் 3500 இற்கும் அதிகமான கோள்களை நாம் கண்டறிந்துள்ளோம். அதில் பல பாறையால் உருவான பூமியின் அளவைக் கொண்டவை, ஆனால் அவை பூமி போலவே இருக்கும் என்று அர்த்தமாகாது.
சிறிய பாறையால் உருவான கோள்களை பற்றி மேலும் தெளிவாக தெரிந்துகொள்ள உதவி செய்வதற்காக விண்ணியலாலர்களும், புவியியல் விஞ்ஞானிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் விண்மீனின் உள்ளே இருக்கும் மூலக்கூறுகளைக் கொண்டு அதனைச் சுற்றிவரும் கோள்களின் தன்மை எப்படியிருக்கும் என்று கண்டறிய ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
விண்மீன்களின் ஆக்கக்கூறுகள், அதனைச் சுற்றிவரும் கோள்களில் உயிரினம் தோன்றுவதற்கான காரணியில் பெருமளவு செல்வாக்குச்செலுத்துகிறது.
இந்த ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்ட 90 விண்மீன்களில் (அவற்றைச் சுற்றி பாறையால் உருவான கோள்கள் இருக்கலாம்) இருக்கும் ஒரு விண்மீனின் கோள் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்தக் கோளிற்கு “Janet” என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இதனது தாய் விண்மீனில் சிலிக்கன் எனப்படும் மூலப்பொருள் அதிகளவில் காணப்படுகிறது.
பூமியின் கால்வாசிக்கும் அதிகமான பகுதி இதே சிலிக்கன் மூலகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மணல் சிலிக்கனால் ஆனதே. ஆனால் Janet இன் தாய் விண்மீனை பார்க்கும் போது, Janet இல் பூமியைவிட அதிகளவாக சிலிக்கன் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பூமியைவிட அதிகளவில் Janet இல் சிலிக்கன் இருந்தால், அந்தக் கோளில் கண்டத்தகடுகள் (plate tectonics) காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. கண்டத்தகடுகள் / கண்டத்தட்டுகளின் அசைவு (டேக்டோனிக்ஸ்) உயிரினம் தோன்ற மிக முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
பூமியில் உள்ள கண்டங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட பாறைகளாகும். இவை சமுத்திரங்களுக்கு அடியில் கூட சுயாதீனமாக அசையக்கூடியவ. இந்த அசைவே கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) எனப்படுகிறது.
இதனால் பலவிதமான இயற்கைச் செயற்பாடுகள் உருவாகின்றன. உதாரணமான பூகம்பம், எரிமலை வெடிப்பு – பூமியின் அடியில் இருந்து உருகிய மூலப்பொருட்களை பூமியின் மேற்பரப்பில் வீசி எறிகின்றன. இப்படியான மூலப்பொருட்கள் பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை நிரப்புகின்றன, இது எம்மைப் போன்ற உயிரினங்கள் உயிர்வாழ உதவுகிறது.
எனவே, விண்மீன்களின் ஆக்கக்கூறுகளை ஆராய்வதன் மூலம், எதிர்காலத்தில் வேற்றுலக உயிரினங்களை ஆய்வுசெய்வதற்கு ஏற்ற கோள்கள் எவை என்பதனை தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
கண்டத்தட்டுக்கள் வருடத்திற்கு 6 இன்ச் அளவு இடம்பெயருகின்றன. இந்த அசைவை GPS செய்மதிகளைக் கொண்டு எம்மால் கண்காணிக்க முடியும்.
M Sri Saravana, UNAWE Sri Lanka