முரட்டுத்தனமாக பிறந்தவை
1 ஏப்ரல், 2017
கருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ஆனாலும் இந்தக் கருந்துளைகள் பிரபஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும். இவை இந்தப் பிரபஞ்சத்திற்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறது.
மிகப்பாரிய கருந்துளைகள் (supermassive black holes) விண்மீன் பேரடையின் மத்தியில் காணப்படுகின்றன. இவை அவற்றைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சத் தூசுகளையும் வாயுக்களையும் கபளீகரம் செய்கின்றன. இப்படியாக கபளீகரம் செய்யும் போது சக்தி வெளியிடப்படுகிறது, இந்த சக்தி அதைச் சூழவுள்ள பிரதேசத்தை வெப்பப்படுத்துகிறது. இந்தப் பிரதேசத்தில் இருக்கும் பொருட்கள் விண்மீன் பேரடையின் இருபுறமும் மிக வேகமாக ஜெட் போல சிதறடிக்கப்படுகின்றன. இதனை ஓவியர் மேலே உள்ள படத்தில் விளக்கமாக வரைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
பெரும்பாலும் எல்லா பெரிய விண்மீன் பேரடைகளும் அதனது மத்தியில் மிகப்பாரிய கருந்துளையை கொண்டிருக்கின்றன. அதனால் விண்மீன் பேரடையைச் சுற்றி இந்த ஜெட் போன்ற சிதறல் ஒரு பொதுவான காட்சியே. ஆனாலும் இந்தப் படத்தில் இருக்கும் ஒரு விடையம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது: அதாவது இந்த ஜெட் பிரதேசத்தினுள் புதிதாக பிறக்கும் விண்மீன்கள் விண்மீன் பேரடையை விட்டு வெளியே வீசி எறியப்படுகின்றன. அவற்றை உங்களால் படத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறதா?
இந்த விண்மீன்கள் மிகவும் கொடூரமான சூழலில் வசிக்கின்றன. விண்மீன் பேரடையின் அமைப்புக்குள் இருக்கும் விண்மீன்களை விட இந்த விண்மீன்கள் பிரகாசமாகவும் வெப்பமானதாகவும் காணப்படுகின்றன.
மேலும் இந்த விண்மீன்களில் பல செயற்பாடுமிக்க விண்மீன்களாக காணப்படுகின்றன. இவை விண்மீன் பேரடையின் மையத்தைவிட்டு வேகமாக வெளியேறுகின்றன. இவற்றில் விண்மீன் பேரடையின் மையத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் விண்மீன்கள், விண்மீன் பேரடையை விட்டே வெளியேறி இருள் சூழ்ந்த வெறுமையான விண்வெளியில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கவேண்டிய சாத்தியக்கூறும் காணப்படுகிறது!
விண்மீன் பேரடையின் மையத்தில் உருவாகும் விண்மீன்களின் எதிர்காலம் மேற்சொன்னதற்கு எதிர்மாறாக காணப்படுகிறது: விண்மீன் பேரடையின் ஈர்புவிசையல் அவை ஈர்க்கப்பட்டு அவை விண்மீன் பேரடையின் மையத்தை நோக்கி விழக்கூடும். அங்கே அவர்களுக்காக கருந்துளை காத்துக்கொண்டிருக்கிறார்.
நூற்றாண்டுக்கும் மேலாக விண்ணியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய விடயத்திற்கு இது விடையாக அமையலாம்: சுழல் விண்மீன் பேரடைகளின் மையத்தில் வீக்கம் காணப்படுவதற்குக் காரணம் என்ன?
ஆர்வக்குறிப்பு
இந்தக் கண்டுபிடிப்பு இன்னொரு மர்மத்தையும் தீர்த்துவைக்கும். அதாவது சில ரசாயனங்கள் (ஆக்ஸிஜன் போன்றவை) எப்படி ஒரு விண்மீன் பேரடைக்கு வெளியே இருக்கும் வெறும் வெளியை அடைந்தது என்பதனையும் எம்மால் தற்போது விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. விண்மீன்கள் விண்மீன் பேரடையை விட்டு தூக்கி எறியப்படும் போதும் அவை வெடிக்கும் போதும் அவற்றுக்குள் இருக்கும் ரசயானங்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படலாம்.
This Space Scoop is based on a Press Release from
ESO
.
M Sri Saravana, UNAWE Sri Lanka
படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு
ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...
Space Scoop என்றால் என்ன?
விண்ணியல் பற்றி அறிய
புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்
Space Scoop நண்பர்கள்