டீடீ என்னும் தூரத்து குறள்கோள்
14 மே, 2017

புளுட்டோவை உங்களுக்கு நினைவிருக்கலாம், இப்போது அது கோளில்லை. அதனை நாம் “குறள்கோள்” என்று அழைக்கிறோம். புளுட்டோவைப் போலவே மனது சூரியத்தொகுதியில் இன்னும் நான்கு குறள்கோள்கள் இருக்கின்றன. அவையாவன சீரீஸ், ஹாவ்மீயா, மாக்கேமாக்கே, மற்றும் ஏரிஸ். இவற்றோடு சேர்த்து இன்னும் ஒரு குறள்கோள் இந்த லிஸ்டில் சேரப்போகிறது, இதுதான் “டீடீ” (DeeDee)

குறள்கோள் என்றால் என்ன?

குறள்கோள் எனப்படுவது கோள்களைப் போலவே சூரியனைச் சுற்றிவரும் சிறய விண்பொருட்களாகும். கோள்களைப் போலவே இவையும் கோள வடிவமானவை. கோள்களுக்கும் குறள்கோள்களுக்கும் இடையில் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் குறள்கோள்கள் அதனது சூரியனைச் சுற்றிவரும் பாதையை இன்னும் சுத்தப்படுத்தவில்லை. அதாவது, குறள்கோள் சூரியனைச் சுற்றி பயணிக்கும் பாதையில் இருக்கும் விண்கற்கள், சிறுகோள்கள் மற்றும் சிறிய தூசு துணிக்கைகளை இன்னும் அப்புறப்படுத்தவில்லை.

டீடீ குறள்கோளாக இருப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

டீடீ சூரியனில் இருந்து பூமி இருப்பதைப் போல 100 மடங்கு தொலைவில் இருக்கிறது, புளுட்டோவோடு ஒப்பிட்டால் அதனைவிட மூன்று மடங்கு தொலைவில் இருக்கிறது. சூரியத்தொகுதியில் நாம் கண்டறிந்த இரண்டாவது மிகத் தொலைவில் இருக்கும் விண்பொருள் இதுவாகும். நாம் கண்டறிந்த மிகவும் தொலைவில் இருக்கும் குறள்கோள் ஏரிஸ்.

இவ்வளவு தொலைவில் இருப்பதால் டீடீக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவர அண்ணளவாக 1,100 வருடங்கள் எடுக்கிறது. மேலும் இதன் தொலைவு டீடீயை அவதானிப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆகவே இத்தனிப் பற்றி ஆய்வு செய்வதும் படிப்பதும் சிரமம்தான்.

ஆனாலும் ALMA தொலைநோக்கி டீடீயைப் படம்பிடித்துள்ளது. இதிலிருந்து எமக்கு டீடீ 600 கிமீ விட்டமானது என்று தெரியவந்துள்ளது – அண்ணளவாக பிரிட்டன் நாட்டின் அளவு. இந்த அளவில் இருப்பதால் டீடீ நிச்சயமாக கோள வடிவமாகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். (போதுமானளவு திணிவிருந்தால் ஈர்ப்புவிசை குறித்த பொருளை கோள வடிவமாக மாற்றிவிடுகிறது.)

டீடீயை குறள்கோள் என்று வகைப்படுத்த எமக்கு இன்னும் தகவல்கள் தேவை. குறள்கோளோ இல்லையோ, புளுட்டோவிற்கு ஒரு புதிய நட்பு கிடைத்துவிட்டது என்பதே உண்மை!

ஆர்வக்குறிப்பு

குறள்கோள்கள் மட்டுமே இன்னும் சூரியத்தொகுதியில் ஒளிந்துவாழும் பொருட்கள் இல்லை. சில விஞ்ஞானிகள் “Planet 9” எனும் கோள் சூரியத் தொகுதியின் எல்லையில் இன்னும் எமது கண்களுக்கு புலப்படாமல் உலாவருவதாக கருதுகின்றனர்.

This Space Scoop is based on a Press Release from ALMA .
ALMA

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்