பூமியில் எம்மை நிலத்துடன் ஒட்டி வைத்திருப்பது பூமியின் காந்தபுலம் அல்ல, மாறாக பூமியின் ஈர்ப்புவிசை. பூமியின் ஈர்ப்புவிசை அவ்வளவு வீரியமாக இருந்திராவிட்டால் எம்மால் பூமியின் காந்தபுலத்தை இன்னும் அதிகமாக உணரக்கூடியதாக இருந்திருக்கும்.
எம்மில் பெரும்பாலானவர்களுக்கு காந்தத்தை தெரிந்திருக்கும்; குளிரூட்டியின் கதவுகளில் ஒட்டிவைப்பதில் தொடக்கம், திசைகாட்டியை தொழிற்படவைப்பதற்கும் காரணகர்த்தா. ஆனால் காந்தம் எப்படி வேலைசெய்கிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா?
ஒவ்வொரு காந்தமும் “காந்தப்புலம்” என்கிற ஒன்றை உருவாக்குகிறது. காந்தத்தைச் சுற்றிக் காணப்படும் கண்களுக்குத் தெரியாத பிரதேசம். இந்தப் பகுதியில் காந்தத்தால் கவரவோ, தள்ளவோ முடியும். உதாரணத்திற்கு, குளிரூட்டியின் கதவில் ஒட்டும் காந்தம், கதவை நோக்கி கவர்கிறது.
காந்தத்தின் இந்த அற்புத சக்தியால் காந்தம் பல இடங்களில் காணப்படுகிறது. நீங்கள் அவற்றை உங்கள் கணனியில், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் விண்வெளியிலும் காணலாம்! நமது சூரியனும் ஒரு மிகப்பெரிய காந்தமே!
பெரும்பாலான வேளைகளில் சூரியனின் காந்தப்புலம் அவ்வளவு சக்திவாய்ந்ததாக இருப்பதில்லை; குளிரூட்டிக் கதவுக் காந்தங்களின் சக்தியில் நூறில் ஒரு பங்கு அளவு மட்டுமே இதன் வீரியம் காணப்படும்! ஆனால் தற்போது சூரியனின் காந்தபுலத்தின் சிறிய பிரதேசத்தில் அதன் அளவு சராசரியை விட 6000 மடங்கு வீரியம் கூடியதாக இருப்பதை விஞ்ஞானிகள் அளந்துள்ளனர். இதுவரை சூரியனின் மேற்பரப்பில் அளந்த மிகச் சக்திவாய்ந்த காந்தபுலம் இதுதான்.
இந்த இரண்டு படங்களும் சூரியனின் இந்த அதி சக்திவாய்ந்த காந்தப்புல பிரதேசங்களைக் காட்டுகிறது. இந்தப் பிரதேசம் சூரியப்புள்ளிகளால் நிறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவான பிரதேசங்களாக இந்த சூரியப்புள்ளிகள் காணப்பட்டாலும், இவை அதிக வீரியமான காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது.
மேலே உள்ள படம் சாதாரண சூரியனின் படம், கீழே உள்ள படம் சூரியனின் காந்தபுலத்தைக் காட்டுகிறது. அதில் உள்ள நிறங்கள் அப்பிரதேசத்தில் காணப்படும் காந்தப்புலத்தின் அளவைக் காட்டுகிறது: நீல நிறப் பகுதிகள் காந்தப்புலம் குறைந்த பிரதேசங்களாகும். சிவப்பு நிறப் பிரதேசங்கள் காந்தபுலம் அதிகமான பிரதேசங்களாகும்.
சூரியனின் காந்தப்புலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து துணிக்கைகளை வெளிநோக்கி வீசுகிறது. இந்தத் துணிக்கைகள் செய்மதிகளைப் பாதிக்கும், ரேடியோ சிக்னல்களை சிதைக்கும், மேலும் விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே சூரியனில் எப்படி காந்தபுலம் தொழிற்படுகிறது என்றும் அது எப்படி மாற்றமடைகிறது என்றும் தெரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று!
பூமியில் எம்மை நிலத்துடன் ஒட்டி வைத்திருப்பது பூமியின் காந்தபுலம் அல்ல, மாறாக பூமியின் ஈர்ப்புவிசை. பூமியின் ஈர்ப்புவிசை அவ்வளவு வீரியமாக இருந்திராவிட்டால் எம்மால் பூமியின் காந்தபுலத்தை இன்னும் அதிகமாக உணரக்கூடியதாக இருந்திருக்கும்.
M Sri Saravana, UNAWE Sri Lanka