முடிச்சு அவிழ்க்கப்பட்டது : பிளாசார் பேரடைகளில் இருந்து வரும் மர்மத் துகள்கள்
26 ஜூலை, 2018

பூமியின் தென் துருவம் மிக ஆபத்தான ஒரு சூழல். வெப்பநிலை -80 பாகை செல்சியஸ் வரை செல்லக்கூடிய உறைந்த பாலைவனம். ஆனாலும் அங்கே விஞ்ஞானிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக கூடுகின்றனர். ஏனென்றால் இயற்கையின் ஒரு முக்கிய மர்மத்தை அவிழ்க்கும் முடிச்சு அங்கேதான் இருக்கிறது : பூமியை நோக்கி வரும் மிக மிகச் சிறிய துணிக்கைகளை அனுப்புவது யார்? என்கிற முடிச்சு.

இந்தத் துணிக்கைகள் நியுற்றினோ என அழைக்கப்படுகின்றன. இவை அவதானிப்பதற்கு மிகக் கடினமானவை. பல பில்லியன் கணக்கான நியுற்றினோக்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் உடலை ஒவ்வொரு செக்கன்களும் கடந்து செல்கின்றன. ஒரு டோர்ச் லைட்டை சுவற்றை நோக்கி அடித்தால் அதிலிருந்து வரும் ஒளி சுவற்றில் படும் ஆனால் சுவற்றைக் கடந்து செல்லாது அல்லவா? ஆனால் நியுற்றினோவை வெளியிடும் டோர்ச் ஒன்றை சுவற்றை நோக்கி அடித்தால் நியுற்றினோக்கள் சுவற்றைக் கடந்து சென்றுவிடும்.

இப்படி ஒருவருக்கும் தெரியாமல் சைலண்டாக சென்றுவிடும் நியுற்றினோக்களில் ஒன்று அவ்வப்போது நியுற்றினோ உணரிகளால் உணரப்படும். தற்போது இப்படியான நியுற்றினோக்கள் தென் துருவ பனிக்கு கீழே ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள நியுற்றினோ உணரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.

இப்படி உணரிகளில் நியுற்றினோ மோதும் போது, அங்கே இருக்கும் கணனிகள் வேகமாக தொழிற்பட்டு நியுற்றினோ வந்த திசையை அண்ணளவாக கணக்க்கிட்டுக்கொள்ளும். இப்படி கணக்கிட்டவுடன் உடனடியாக பூமியில் உள்ள தொலைநோக்கி நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நியுற்றினோ வந்த திசையில் இருக்கும் பிரதேசத்தை அவதானிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.

நியுற்றினோ வந்த திசையை அவதானித்த போது விண்ணியலாளர்கள் ஒரு பிளாசார் ஒன்று அங்கே இருப்பதை அவதானித்தனர். இது வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. பிளாசார் என்பது ஒரு விசேட வகை விண்மீன் பேரடை. இதன் நடுவில் இருக்கும் பெரும் திணிவுக் கருந்துளை அதற்கு அருகில் இருக்கும் விண்மீன்களையும் தூசுகளையும் துண்டு துண்டாக உடைத்து பீறேங்கியை பயன்படுத்தி குண்டுகளை எறிவது போல இந்தப் பொருட்களை கருந்துளை வீசியடிக்கும்.

எனவே நியுற்றினோ குறித்த திசையில் இருந்து வந்த நிகழ்வும், பிளாசார் ஒன்று அதே இடத்தில் இருப்பதும் தனிப்பட்ட சம்பந்தமில்லாத நிகழ்வுகளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்றே கூறலாம் – எனவே பிரபஞ்சத்தின் ஒரு ரகசிய முடிச்சை நாம் வெற்றிகரமாக அவிழ்த்து இருக்கிறோம்!

ஆர்வக்குறிப்பு

பெரும்பாலான நியுற்றினோக்கள் எமது உணரிகளினூடாக எந்தவொரு தொடர்பும் இன்றி அமைதியாக சென்றுவிடுகின்றன. மனித அளவில் ஒரு நியுற்றினோ உணரி இருந்தால் முதலாவது நியுற்றினோவை அது உணர 100 வருடங்கள் எடுக்கும், அதேவேளை அதிசக்தி நியுற்றினோ ஒன்றை உணர 100,000 வருடங்கள் எடுக்கும்.

This Space Scoop is based on a Press Release from NAOJ .
NAOJ

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்