டைட்டான் கிளப்பும் மணற்புயல்
1 அக்டோபர், 2018
கொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது 2017 இல் சனியுடன் மோதி தனது வாழ்வை முடித்துக்கொண்ட காசினி விண்கலமாகும்.
காசினி திட்டம் 1997 இல் சனியையும் அதன் துணைக்கோள்களையும் ஆய்வு செய்யும் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து அடுத்த 13 வருடங்களுக்கு அது எமக்கு பல விடையங்களை தெரியப்படுத்தியுள்ளது. சனியின் முகில்களுக்கு உள்ளே ஆடும் மின்னல் கீற்றுக்கள், மற்றும் இன்றுவரை அதன் வளையங்களில் புதிதாகச் சேர்ந்துகொண்டிருக்கும் பனியைப் பற்றி என்று இன்னும் பல விடையங்களை காசினி எமக்குச் சொல்லித்தந்துள்ளது.
துரதிஸ்டவசமாக கடந்த ஆண்டில் காசினி தனது திட்ட ஆயுள்காலத்தை முடித்துக்கொண்டு சனியின் மேட்பரபிற்குள் நுழைந்து அதன் வீரியமான ஈர்ப்புவிசையாலும், அடத்தியான மேகங்களாலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
இறந்தாலும், இன்னும் இந்த விண்கலம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது!
டம்பிள்டோரின் ஞாபகக் குறிப்புகளை ஹரி பாட்டர் திரும்பி மீட்டுப் பார்ப்பதைப் போல, விஞ்ஞானிகள் காசினி விண்கலத்தின் தரவுகளை மீட்டுப் பார்க்கின்றனர். அப்போது 2009 இல் டைட்டானில் இடம்பெற்ற விசித்திரமான நிகழ்வை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஐக்கிய இராஜ்ஜிஜத்தின் அளவுகொண்ட (சில வேளைகளில் அதைவிட இரண்டு மடங்கு) பிரதேசம் சில மணித்தியாலங்கள் தொடக்கம் சில நாட்கள் வரை பிரகாசமாக காட்சியளிப்பதை விஞ்ஞானிகள் அவதானிக்கின்றனர்.
முதலில் இது ஒரு பெரிய புயலுக்கான முகில்கள் என்றே கருதப்பட்டது. காரணம் டைட்டான் ஒரு விசித்திரமான உலகம். சூரியத் தொகுதியில் இருக்கும் துணைக்கோள்களில் அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்ட ஒரே துணைக்கோள் இது, மேலும் இந்தப் பிரபஞ்சத்தில் நாமறிந்து பூமியைத் தவிர்த்து திரவநிலையில் ஏரிகள், கடல்கள் மற்றும் ஆறுகள் காணப்படும் ஒரே இடம்!
ஆனாலும் இதிலிருக்கும் ஒரே வித்தியாசம், பூமியில் இருக்கும் திரவ கட்டமைப்புகள் நீரால் நிரம்பியுள்ளது, ஆனால் டைட்டானில் இவை பிரதானமாக மீதேன் எனும் இரசாயனக் கட்டமைப்பால் நிரம்பியுள்ளது.
பூமியில் சமுத்திர நீரினால் காலநிலை உருவாவது போலவே, டைட்டானிலும் திரவ மீதேன் காலநிலையை உருவாக்குகின்றது. அவை ஆவியாகி முகில்களாக மாறி மீண்டும் மழை போல் பெய்து நிலத்திற்கு திரும்புகிறது.
டைட்டானிலும் பருவகாலத்திற்கு ஏற்ப காலநிலை மாறுபடுகிறது. அதன் வருடத்தில் சில காலங்களில் ஆபத்தற்ற மழை அபாயகரமான புயல்மழையாக மாறுகிறது. 2009 இல் பார்த்தது இப்படியான ஒரு புயல்மழை என்றே விஞ்ஞானிகள் அப்போது கருதினர்.
ஆனால், இந்த தரவுகளை உன்னிப்பாக அவதானித்தபோது, இந்தப் பிரகாசமான பிரதேசம் நிலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் இவை முகில்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மேலும் இந்த பிரகாசமான பிரதேசம் டைட்டானின் மணல் மேட்டு பிரதேசத்திலேயே காணப்பட்டுள்ளது. எனவே இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இது தூசுப்புயலாக இருக்கவேண்டும் என்று உணர்ந்துகொண்டனர்.
மிக வேகமான காற்று, புயல் உருவாவதற்கு முன்னர் மணல் மேடுகளில் இருக்கும் மணலை கிளப்பியதால் இந்த பிரகாசமான பிரதேசம் உருவாகியுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பால் பூமிக்கும் டைட்டானுக்கும் இருக்கும் ஒற்றுமை மேலும் அதிகரித்துள்ளது என்பதனை நாம் அறியலாம். தனது திட்டத்தை முடித்தும் கூட காசினி எமக்கு பல புதிய விடையங்களை சொல்லித்தருகிறது அல்லவா!