இந்த இரண்டு விண்மீன்களுக்கும் இடையில் சுழலும் தூசுமண்டலத்தில் உருவாகும் புயல் மணிக்கு 12 மில்லியன் கிமீ வேகத்தில் வீசுகிறது. இது பூமியில் இதுவரை வந்த மிகவேகமான சூறாவளியைவிட 40,000 மடங்கு வேகமானது!
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப் பெரியதும், மிக வெப்பமானதுமான விண்மீன்களில் சிலவற்றை நாம் Wolf-Rayet விண்மீன்கள் என அழைக்கிறோம். கற்பனைக் கதைகளில் வரும் பெரிய பயமுறுத்தும் ஓநாய்களைப் போல இந்த விண்மீன்களும் எம்மை மிரட்டுமளவிற்கு பெருமூச்சுவிட்டு உறுமுவது போல அதி சக்திவாய்ந்த வெப்பமான வாயுக்களை புயலாக வீசியெறிகின்றன.
தூசுப் படலம் என்பது விண்வெளியில் பொதுவான விடையம்தான், ஆனாலும் இப்படி படத்தில் இருப்பது போல காற்றுச் சுழலி போல அமைந்த ஒரு தூசுப் படலத்தை நாம் இதற்கு முன்னர் பார்க்கவில்லை என்றே கூறலாம். இது இரண்டு Wolf-Rayet விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றுவதால் உருவானது.
இந்த இரண்டு ஓநாய்களும் ஒன்றையொன்று பிடிக்க துரத்தும் நாடகத்தில் ஒரு விண்மீன் மட்டும் மற்றையதை விட மிக வேகமாக பயணிக்கிறது. குறிப்பாக கூறவேண்டும் என்றால் இது பயணிக்கும் வேகத்திற்கு இந்த விண்மீனே துண்டு துண்டாக சிதைந்துவிடும் போல இருக்கிறது! இது சுவாரஸ்யமான விடையம் தான், காரணம் இந்த Wolf-Rayet விண்மீன்கள் தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் விண்மீன்கள் தான். இவை தங்கள் வாழ்வை முடித்துவிட்டு சுப்பர்நோவா வெடிப்பாக மிக உக்கிரமாக வெடித்துவிடும்.
போதுமான வேகத்தில் சுழலும் ஒரு விண்மீன் வெடிக்கும் போது அது இந்த பிரபஞ்சத்தின் மிகச் சக்திவாய்ந்த வெடிப்பான காமா கதிர் வெடிப்பாக (gamma ray burst) இருக்கும்.
காமா கதிர் வெடிப்பு என்பது மிகச் சக்திவாய்ந்த வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பில் வெளிவரும் சக்தி பிரபஞ்சத்தில் இருக்கும் ஏனைய பொருட்களைவிட பலமடங்கு பிரகாசத்தில் ஒளிரும். பூமிக்கு அருகில் ஒரு காமா கதிர் வெடிப்பு நிகழுமாயின் மொத்த பூமியுமே கண்ணிமைக்கும் நொடியில் கருகிவிடும்.
அதிர்ஷ்டவசமாக நாம் அவதானித்த காமா கதிர் வெடிப்புகள் எல்லாமே தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளிலேயே நிகழ்ந்துள்ளது. அவ்வளவு தொலைவில் நிகழ்ந்தாலும் பூமியில் இருந்து அவற்றை எம்மால் இலகுவாக அவதானித்துவிடக்கூடியதாக இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த Wolf-Rayet விண்மீன்கள் நமது பால்வீதியில் நாம் அவதானிக்கப்போகும் முதலாவது காமா கதிர் வெடிப்பாக இருக்கப்போகிறது!
இந்த இரண்டு விண்மீன்களுக்கும் இடையில் சுழலும் தூசுமண்டலத்தில் உருவாகும் புயல் மணிக்கு 12 மில்லியன் கிமீ வேகத்தில் வீசுகிறது. இது பூமியில் இதுவரை வந்த மிகவேகமான சூறாவளியைவிட 40,000 மடங்கு வேகமானது!
M Sri Saravana, UNAWE Sri Lanka