சிறிய கருந்துளை ஒன்றை உருவாக்க பூமியளவுள்ள திணிவு கொண்ட பொருளொன்றை ஒரு சிறிய கடலை அளவிற்கு சுருக்கவேண்டும்!
நீண்ட காலமாகவே கோள்கள் விண்மீனைச் சுற்றி பிறந்து வாழும் என எமக்கு தெரியும். உதாரணத்திற்கு சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்து கோள்களுக்கும் நமது சூரியனே தாய் விண்மீன். ஆனால் புதிய கண்டுபிடிப்பு விண்ணியலாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, காரணம், கோள்கள் நாம் எதிர்பார்த்ததை விட கடினமான சூழலிலும் உருவாகலாம் என்பதுதான்.
ஒரு புதிய விண்மீன் ஒன்று உருவாகும் போது, அதனைச் சுற்றி எஞ்சியிருக்கும் தூசுகளும் வாயுக்களும் வளையமான தகடு போன்ற அமைப்பாக உருவாகும். அதாவது சனியின் வளையத்தைப் போல. இந்த வளையத்தினுள் சிறிய தூசுகள் ஒன்று சேர்ந்து பாறை போன்ற அமைப்பும் உருவாகலாம். இப்படியான சிறிய பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி இணைந்து மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டே வரும் - இப்படியாக ஒரு கோளாக இது உருவாகும்.
புதிய ஆய்வு முடிவுகள் இப்படியான கோள்களை உருவாக்கக்கூடிய வாயுக்கள், தூசுகள் மற்றும் தகடு போன்ற அமைப்பு பாரிய கருந்துளை ஒன்றைச் சுற்றியும் காணப்படும் என்று எமக்கு தெரிவிக்கிறது. கருந்துளைகள் பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய பொருட்கள். அதிகளவான பருப்பொருள் சிறிய இடமொன்றினுள் நெருக்கப்பட்டிருக்கும் ஒரு இடம். அதற்கு அருகில் நெருங்கி வரும் எவரையும் தனது அதி சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையால் மீண்டு செல்லமுடியாதபடி இழுத்துவிடும்.
இப்படியான சூழலில் கருத்துளையைச் சுற்றி உருவாக்கக்கூடிய கோள் பூமியை விட பெரிதாகவே இருக்கும். குறைந்தது பத்துமடங்கு பெரிதாக இருக்கவேண்டும்.
இன்று நம்மிடம் இருக்கும் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு இப்படியான ஒரு கோள் கருந்துளை ஒன்றை சுற்றி வருகிறதா என்று கண்டறிய முடியாது. ஆனாலும் எதிரிவரும் காலத்தில் இப்படியான கோள்களை கண்டறிய முடியும் என விண்ணியலாளர்கள் நம்புகின்றனர்.
சிறிய கருந்துளை ஒன்றை உருவாக்க பூமியளவுள்ள திணிவு கொண்ட பொருளொன்றை ஒரு சிறிய கடலை அளவிற்கு சுருக்கவேண்டும்!
M Sri Saravana, UNAWE Sri Lanka