கோழைப்பூசனமும் பிரபஞ்சமும்
10 மார்ச், 2020

ஒரு கல அங்கியான கோழைப்பூசனம் (Physarum polycephalum) உணவு தேடுவதற்காக வலைப்பின்னல் போன்ற சிக்கலான கட்டமைப்பை உருவாக்கும். இதன் மூலம் உணவை அடைவதற்கான சிறந்த வழியை அதனால் தேர்வு செய்யக்கூடியதாக இருக்கும். இதே போலவே இந்தப் பிரபஞ்சத்திலும் ஈர்ப்புவிசை சிக்கலான சிலந்தி வலை போன்ற கட்டமைப்பை உருவாக்கி விண்மீன் பேரடைகளையும், பேரடைக் கொத்துகளையும் ஒன்றாக பிணைத்து பல நூறு மில்லியன் ஒளியாண்டுகள் நீளமான கடபுலனாகா பாலங்களை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விண்ணியலாளர்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு வகையான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை அவதானித்துள்ளனர். ஒன்று உயிரியலாலும் கூர்ப்பினாலும் உருவானது, அடுத்தது பிரபஞ்சத்தின் பெரும் சக்தியான ஈர்ப்புவிசையால் உருவானது.

கோழைப்பூசனம் தொழிற்படும் முறையை அடிப்படையாக கொண்டு, விண்ணியலாளர்கள் கணனி நிரல் நெறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதனைக் கொண்டு பிரபஞ்சத்தின் அளப்பரிய கட்டுமானங்களை படமிட முடியும்.

விண்மீன் பேரடைகளின் குழுவை நீங்கள் சிறு நகரங்கள் என கருதினால், பேரடைக் கொத்துக்களை பெரும் நகரங்கள் எனவும் மீபேரடைக் கொத்துக்களை நாடுகள் எனவும் கருத முடியும். இந்த நாடுகளில் பெரும் நகரங்களும் சிறு நகரங்களும் இருக்கும். கதை இதோடு முடியவில்லை, இந்தப் பிரபஞ்ச நாடுகளுக்கிடையில் "காஸ்மிக் வெப்" என அழைக்கப்படும் பிரபஞ்ச வலைப்பின்னல் போன்றதொரு கட்டமைப்பு உள்ளது.

இந்தப் பிரபஞ்ச வலைப்பின்னலையே விண்ணியலாளர்கள் குழு நாசா/ஈஸா வின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கு கோழைப்பூசனமும் உதவியுள்ளது.

காஸ்மிக் வெப் எனப்படும் கட்டமைப்பு இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கட்டுமானமாகும். இது பெரும்பாலும் "கரும்பொருள்" எனப்படும் வஸ்துவினால் உருவானது. கரும்பொருளை எம்மால் அவதானிக்க முடியாவிட்டாலும், பிரபஞ்சத்தின் பெரும்பாலான வஸ்து கரும்பொருளால் உருவானதுதான்.

படவுதவி: NASA, ESA, and J. Burchett and O. Elek (UC Santa Cruz)

ஆர்வக்குறிப்பு

நமது பால்வீதியை ஒரு எள்ளின் அளவாக கொண்டால், அவதானிக்கக்கூடிய பிரபஞ்சத்தில் இருக்கும் காஸ்மிக் வெப் கிசா பிரமிட்டின் அளவிருக்கும்.

This Space Scoop is based on a Press Release from ESA .
ESA

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்