நியூட்ரோன் விண்மீன்கள் எம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதளவு நெருக்கமாக பருப்பொருளால் அடைக்கப்பட்டிருக்கும். எனவே அது மிச்சி சீரான ஒரு பந்துபோல காணப்படும். அதில் பூமி போல ஒரு மலை உருவாகமுடிந்தால் அதன் உயரம் வெறும் 5 மில்லிமீட்டரை தாண்டாது!
விண்ணில் இருக்கும் பொருட்கள் எல்லாமே பார்த்தவுடனேயே புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. சிலவேளைகளில் ஒரே பொருளை நீண்ட காலம் அவதானித்த பின்னரே அதனது அம்சங்களை எம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். 33 வருடங்களாக புரியாத புதிராக இருந்த ஒரு விண்பொருள் பற்றிய முடிச்சை தேசிய ரேடியோ விண்ணியல் ஆய்வகம் அவிழ்த்துள்ளது.
நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ளது
ஒரு பெரும் விண்மீன் தனது வாழ்வுக்காலத்தை முடித்துவிட்டு பிரகாசமான ஒளியில் சூப்பர்நோவாவாக வெடித்துவிடும். இந்த வெடிப்பில் அவ்விண்மீனின் வெளிப்புற வாயு மண்டலம் பிரபஞ்ச வெளியில் விசிறி எறியப்படும். அனால் அதன் மையத்தில் இருக்கும் பருப்பொருள் அம்சம் தனக்குள்ளேயே ஒடுங்கிவிடும். இது நெருக்கமாக அடைக்கப்பட்ட பந்தைப்போல உருமாறிவிடும். இப்படி உருவாகும் பொருள், இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான பொருளாக (கருந்துளை தவிர்த்து) கருதப்படும் நியூட்ரோன் விண்மீன் ஆகும்.
சூப்பர்நோவா மர்மம்
1987A என்கிற சூப்பர்நோவா எச்சத்தின் மையத்தில் என்ன இருக்கிறது என்கிற கேள்விக்கு விடையை விஞ்ஞானிகள் கண்டறிந்துவிட்டனர் என்று சொல்லலாம். குறித்த சூப்பர்நோவா வெடிப்பு 1987 இல் இடம்பெற்றது (எனவேதான் அதன் பெயர் 1987A). அக்காலத்தில் இரவு வானில் இது மிகவும் பிரகாசமான வெடிப்பாக கருதப்பட்டது. எனவே அக்காலத்தில் இருந்து அந்த வெடிப்பின் மையத்தில் உருவாக்கிய எச்சமாகிய நியூட்ரோன் விண்மீன் எங்கே என விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தனர்.
குறித்த 1987 வெடிப்பு நிகழ்ந்த வேளையில் விண்ணியலாளர்களால் அதன் மையத்தில் உருவாகியிருக்கக்கூடிய நியூட்ரோன் விண்மீனைக் கண்டறியமுடியவில்லை. எனவே அது ஒரு கருந்துளையாக ஒடுங்கியிருக்குமோ என அவர்கள் சந்தேகித்தனர். எனவேதான் மூன்று தசாப்தங்களாக அந்த சூப்பர்நோவா வேண்டிப்பின் முடிவு என்ன என்கிற கேள்விக்கு பதில் ஒரு புரியாத புதிராகவே இருந்தது எனலாம்.
ஒரு குமிழ்
அண்மையில் ALMA வின் ரேடியோ தொலைநோக்கி புதிராக இருந்த நியூட்ரோன் விண்மீனின் ஒரு தடயத்தை கண்டறிந்தது. தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் தெளிவு காரணமாக குறிப்பிட்ட சூப்பர்நோவா எச்சத்தின் மையத்தில் இருக்கும் குமிழ் போன்ற அம்சத்தை எம்மால் தெளிவாக அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது. இதன் பிரகாசம் அந்தண் சுற்றுப்புறத்தை விட அதிகமாக இருப்பதாலும், ஒரு நியூட்ரோன் விண்மீனின் அம்சங்களுக்குள் அந்த குமிழ் அமைப்பு பொருந்திப்போவதாலும் அந்த இடத்தில் தான் நியூட்ரோன் விண்மீன் இருக்கிறது என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
இது உறுதி செய்யப்பட்டால், நாமறிந்த மிக இளமையான நியூட்ரோன் விண்மீன் இதுவாகத்தான் இருக்கும். விண்ணியலாளர்கள் தொடர்ந்து இதனை ஆய்வு செய்து எமக்கு மேலும் மேலும் புதிய தகவல்களை தந்துகொண்டே இருப்பார்கள்!
நியூட்ரோன் விண்மீன்கள் எம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதளவு நெருக்கமாக பருப்பொருளால் அடைக்கப்பட்டிருக்கும். எனவே அது மிச்சி சீரான ஒரு பந்துபோல காணப்படும். அதில் பூமி போல ஒரு மலை உருவாகமுடிந்தால் அதன் உயரம் வெறும் 5 மில்லிமீட்டரை தாண்டாது!
M Srisaravana, UNAWE Sri Lanka