பூமிக்கு அருகில் புதிய ட்ரோஜான் சிறுகோள்
4 பிப்ரவரி, 2022

சில்லியில் இருக்கும் SOAR தொலைநோக்கியை பயன்படுத்தி விண்ணியலாளர்கள் பூமிக்கு மிக அருகிலேயே வலம்வந்துகொண்டிருக்கும் ஒரு ட்ரோஜான் சிறுகோள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர் - இது மிகவும் ஆச்சரியமான அதேவேளை சற்றே விசித்திரமான கண்டுபிடிப்புதான். நமது சூரியத் தொகுதி பிறக்கும் போது காணப்பட்ட மூலப்பொருட்களால் இப்படியான சிறுகோள்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் நமது கோள்களின் அடிப்படைக் கட்டமைப்புக்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

'ட்ரோஜான்' சிறுகோள்கள் என்றால் என்ன என்று உங்களுக்கு சந்தேகம் வரக்கூடும். இவை கோள்களுக்கு அருகிலேயே அவற்றின் சுற்றுப்பாதையில் பயணிக்கும் 'பக்கத்து வீட்டுக்கார' சிறிய வான்பொருட்களாகும். இவை கோள்களின் ஈர்ப்பினால் உணரப்படும் விசையும், சூரியனின் (மற்றும் ஏனைய கோள்கள்) ஈர்ப்பினால் உணரப்படும் விசையும் சமப்படும் பிரதேசமான லாக்ராஞ்சிய புள்ளிகள் எனப்படும் பிரதேசத்தில் வசிக்கின்றன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள சிறுகோள் '2020 XL5' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது பூமிக்கு அருகில் இருக்கும் லாக்ராஞ்சிய புள்ளியில் வசிக்கும் ட்ரோஜான் சிறுகோளாகும்.

நாம் இதுவரை கண்டறிந்துள்ள பூமியின் இரண்டாவது ட்ரோஜான் சிறுகோள் இது. அண்ணளவாக 1.2 கிமீ விட்டத்தைக் கொண்டுள்ள இந்தச் சிறுகோள் இரண்டு ட்ரோஜான்களில் பெரியது. ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் கண்டறியப்பட்ட 2010 TK7 சிறுகோளை விட மூன்று மடங்கு பெரியது. 2010 TK7 வெறும் 400 மீட்டார் விட்டமானது. எனவே புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 2020 XL5 எவ்வளவு பெரியது என்று உங்களால் கற்பனை செய்துபார்க்கக்கூடியதாக இருக்கும்.

2020 XL5 ஒரு ட்ரோஜான் சிறுகோள் என்று எப்படி விண்ணியலாளர்கள் கண்டறிந்தனர்? இது ஒரு பூமிக்கு அருகில் வந்துசெல்லக்கூடிய வான்பொருள் (near-Earth object) இல்லை என்று எப்படி இவர்களால் உறுதியாக கண்டறியமுடிந்தது? ஆய்வாளர்கள் 'கரும்சக்திக் கணக்கெடுப்பில்' பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். 2012 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட 2020 XL5 இன் சுற்றுவட்டப்பாதை உறுதியாக இது பூமியின் ட்ரோஜான் சிறுகோள்தான் என்று உறுதிப்படுத்தியது.

ஆனாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் சிறுகோள் பூமியின் ட்ரோஜானாக இருக்காது. அடுத்த 4000 ஆண்டுகளுக்குத்தான் இதனது சுற்றுப்பாதை பூமியின் பாதையில் அமையும். அதற்குப்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்புவிசைச் சறுக்கலால் பூமியின் பாதையில் இருந்து விடுபட்டு சூரியத் தொகுதியைச் சுற்றிவரத்தொடங்கிவிடும்.

படவுதவி: NOIRLab/NSF/AURA/J. da Silva/Spaceengine. Acknowledgment: M. Zamani (NSF’s NOIRLab)

ஆர்வக்குறிப்பு

இன்னும் அதிகளவில் பூமிக்கு அருகில் சுற்றும் ட்ரோஜான் சிறுகோள்கள் இருக்ககூடும் என விண்ணியலாளர்கள் கூறுகின்றனர். வானத்தில் அவை சூரியனுக்கு அருகில் வரும் போது அதனை நம்மால் இலகுவாக அவதானிக்க முடியும். இதனால்தான் இப்படியான ட்ரோஜான் சிறுகோள்களை தேசவும், அவதானிக்கவும் சூரிய உதயம் அல்லது அஸ்தமன நேரம் சிறந்தது. 2020 XL5 சிறுகோளை கண்டறிய SOAR தொலைநோக்கியை அடிவானத்தில் இருந்து வெறும் 16 பாகை உயர்த்தி வைத்து தேடியுள்ளனர்.

This Space Scoop is based on a Press Release from NOIRLab .
NOIRLab

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்