நமது சூரியத் தொகுதி, பால்வீதியின் மையத்திற்கும், பால்வீதியின் வெளிப்புறத்திற்கும் இடையில் காணப்படுகிறது. பால்வீதியின் மையத்தில் இருந்து ஒளி எம்மை வந்தடைய அண்ணளவாக 26000 வருடங்கள் எடுக்கும்!
நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன் பேரடையான பால்வீதியாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்த அமைப்பை “galaxias kyklos” என அழைத்தனர். அப்படியென்றால், பால் போன்ற வட்டம் என்று பொருள். இதிலிருந்துதான் நாம் தற்போது விண்மீன் பேரடைகளை அழைக்கும் ஆங்கிலச் சொல்லான, “galaxy” என்கிற சொல்லும், எமது விண்மீன் பேரடையை அழைக்கும் “பால்வீதி” என்கிற சொற்பதமும் வந்தது.
சரி, ஆனால் இந்த சற்று வீங்கியது போன்ற மையத்தில் இருக்கும் அமைப்பு என்ன?
நீண்ட காலமாக அது பிரபஞ்ச மேகங்கள் என்றே மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் ஒரு நாள், கலிலியோ கலிலி என்பவர் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியைக் கொண்டு அந்தப் பிரதேசத்தைப் பார்த்தார், வியந்தார்! காரணம், அந்த வீக்கம், ஏற்கனவே நினைத்திருந்தது போல மேகங்கள் அன்று, மாறாக மில்லியன் கணக்கான விண்மீன்கள்! அவை மிக மிக நெருக்கமாக இருப்பதால், எமது சிறிய கண்களுக்கு அவை தனித்தனி விண்மீன்களாகத் தெரிவதில்லை; மாறாக அவை ஒரு மாபெரும் ஒளிரும் கோளம் போலத் தெரிகிறது.
இந்த ஒளிரும் கோளம் அல்லது வீக்கம் எமது பால்வீதியின் மையப்பகுதியாகும். இன்றுகூட கலிலியோவின் தொலைக்காட்டியைவிட தொழில்நுட்பத்தில் பலமடங்கு வளர்ச்சியடைந்த தொலைக்காட்டிகளைக் கொண்டும் எம்மால் சரிவர இந்த மைய்யப்பகுதியின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம், இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சத்தூசுகள் ஆகும். அவை, இந்த மையப்பகுதியில் இருக்கும் விண்மீன்களில் இருந்துவரும் ஒளி எம்மை வந்தடைவதைத் தடுக்கிறது.
எப்படியிருப்பினும், ஒருவிதமான ஒளி, இந்தத் தூசுகளைக்கடந்து பயணிக்கக்கூடியது. அதுதான் அகச்சிவப்புக் கதிர்கள். ஆகவே, அகச்சிவப்புக் கதிர்களைப் பார்க்ககூடிய தொலைக்காட்டிகளைக் கொண்டு வானியலாளர்கள், இந்த மையப்பகுதியில் என்ன இருக்கும் என்று ஆராய்கின்றனர். இப்படியான ஆய்வில் தற்போது புதிய பல வான்பொருகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் விண்மீன் கொத்துக்கள், மற்றும் வெடிக்கும் விண்மீன்கள் என்பனவும் அடங்கும்.
நம் பால்வீதியின் மையத்தில் எதிர்பாராத விதமாக இந்தப் புதிய விண்மீன்களின் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் இருக்கும் சிவப்புப் புள்ளிகள் அவற்றின் இருப்பிடத்தைக் குறிக்கின்றன. தங்க நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள விண்மீன் நாமிருக்கும் இடத்தைக் காட்டுகிறது!
இந்தக் கண்டுபிடிப்பிற்கு முன்னர், வானியலாளர்கள், பால்வீதியின் மைய்யப்பகுதியில் மிகப்பழைய விண்மீன்கள் மட்டுமே இருக்கின்றன என்று கருதினர். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அந்தப் பிரதேசத்தில் புதிய விண்மீன்கள் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இது, நாம் பால்வீதியின் மைய்யப்பகுதி, நாம் எதிர்பார்த்ததை விட இளமையானது என்பதனைத் தெளிவுபடுத்துகிறது.
நமது சூரியத் தொகுதி, பால்வீதியின் மையத்திற்கும், பால்வீதியின் வெளிப்புறத்திற்கும் இடையில் காணப்படுகிறது. பால்வீதியின் மையத்தில் இருந்து ஒளி எம்மை வந்தடைய அண்ணளவாக 26000 வருடங்கள் எடுக்கும்!
Sri Saravana, UNAWE Sri Lanka