பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியது. இது பிரபஞ்சம் பெருவெடிப்பில் உருவாகி சொற்ப காலமாகும்.
முட்டாள்த்தனமான கேள்வி என்று ஒன்றும் இல்லை. சில சில்லறைத்தனமான கேள்விகள்தான் மகத்தான விடைகளுக்குக் காரணமாக இருந்திருகின்றன. ஒரு உதாரணத்திற்கு, ஏன் விண்வெளி இருளாக இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்க்கலாம். இதற்குப் பதிலளிக்க, விண்மீன்களுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும், ஒளியின் வேகம் என்பனவற்றை நாம் ஆராயவேண்டும். மேலும் இந்தப் பிரபஞ்சம் எப்படி தொடர்ந்து விரிந்துகொண்டு இருக்கிறது என்றும் அறியவேண்டும்.
இதனைபோலவே, விண்ணியலாளர்கள் ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு எளிமையான கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கேள்வி இதுதான்: ஏன் சில விண்மீன் பேரடைகளில் மட்டும் அதிகளவான விண்மீன்கள் உருவாகின்றன? மேலோட்டமாக பார்க்கும்போது இது வெளிப்படையான கேள்வியாகத் தெரியலாம் – பெரிய விண்மீன் பேரடைகள் அதிகளவு வாயுக்களைக் கொண்டிருக்கும். ஆகவே பெரிய விண்மீன் பேரடைகளில், சிறிய விண்மீன் பேரடைகளைவிட அதிகளவான விண்மீன்கள் பிறக்கும். விண்மீன்களின் உருவாக்கத்திற்கான மூலக்கூரே இந்தப் பிரபஞ்ச வாயுக்கள் தானே!
இது பொதுவான உண்மையாக இருப்பினும், இது உறுதியான சட்டம் இல்லை. ALMA தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்த விஞ்ஞானிகள், சம அளவுகொண்ட வாயுக்களை கொண்டுள்ள விண்மீன் பேரடைகளில், தற்போது உருவாகும் விண்மீன்களை விட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதிகளவான விண்மீன்கள் உருவாகியுள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.
நமது சூரியத்தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான பால்வீதியில், தற்போது சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு விண்மீன் பிறக்கிறது. ஆனால் முன்னொரு காலத்தில், விண்மீன் பேரடைகளில் ஒவ்வொரு வருடமும் சிலநூறு விண்மீன்கள் பிறந்துள்ளன!
இறந்த காலத்தில் ஏன் விண்மீன் பேரடைகள் அதிக வினைத்திறனுடன் விண்மீன்களை உருவாக்கியது என்று இன்னும் விஞ்ஞானிகளால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இதற்குக் காரணம் விண்மீன் பேரடைகள் அதிகளவில் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சம் விரிவடைவதால், தற்போது இருப்பதைவிட பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் சிறிதாக இருந்தது, அப்போது விண்மீன் பேரடைகள் ஒன்றுகொன்று நெருக்கமாக இருந்ததனால் அவை அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த மோதலில் இருந்து பல விண்மீன்கள் உருவாகியிருக்கமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கறது.
பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியது. இது பிரபஞ்சம் பெருவெடிப்பில் உருவாகி சொற்ப காலமாகும்.
M Sri Saravana, UNAWE Sri Lanka