காமா அலைவீச்சில் வலை பின்னும் பிரபஞ்சச் சிலந்தி
19 ஜனவரி, 2022

வானில் ஒரு விசித்திர சிலந்தி ஒன்றை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் - இது ஒரு அபூர்வமான இரட்டைவிண்மீன் தொகுதியாகும். இரட்டைவிண்மீன் தொகுதியில் இரண்டு விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிவரும். பூமியில் இருந்து 2600 ஒளியாண்டுகள் தொலைவில் இந்தத் தொகுதி இருக்கிறது.

ஏனைய இரட்டைவிண்மீன் தொகுதிகளை விட இந்தத் தொகுதி மாறுபட்டு இருப்பதற்கு காரணம் இதில் இருக்கும் விண்மீன் ஒன்று வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனாக மாற்றமடைந்துகொண்டிருக்கிறது. மற்றைய விண்மீன் ஒரு நியுட்ரோன் விண்மீனாக இருந்து தற்போதுதான் ஒரு பல்சாராக மாறியிருக்கிறது! விண்ணியலாளர்கள் இப்படியான விண்மீன் தொகுதிகளை சிலந்திகள் என்று அழைப்பதற்குக் காரணம், இவற்றில் இருக்கும் பல்சார் விண்மீன் மற்றைய விண்மீனின் வெளிப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் பண்ணிவிடும்.

4FGL J1120.0-2204 என பெயரிடப்பட்டுள்ள இந்த இரட்டைவிண்மீன் தொகுதிதான் 'சிலந்தி' வகையில் முதலாவது உதாரணமாகும். நாமிதுவரை அவதானித்ததில் இரண்டாவது பிரகாசமான காமா கதிர்வீச்சு இந்தத் தொகுதியில் இருந்துதான் வருகிறது. இது ஒரு இரட்டை விண்மீன் தொகுதி என்று அண்மையில் தான் விண்ணியலாளர்கள் உறுதிப்படுத்தினர்.

காமா கதிர்வீச்சு வரும் பிரதேசம் என்று தெரிந்திருந்தாலும் அது என்னவென்று சரியாகத் தெரியாததால் சில்லியில் இருக்கும் 4.1 மீட்டார் விட்டம் கொண்ட SOAR தொலைநோக்கியைக் கொண்டு ஆய்வாளர்கள் தரவுகளைத் திரட்டினார்கள். இதிலிருந்து நாம் அறிந்துகொண்டது இது ஒரு இரட்டை விண்மீன் தொகுதி என்றும், அதில் ஒரு விண்மீன் மில்லிசெக்கன் பல்சார் (மில்லிசெக்கன் பல்சார் மிகவேகமான சுழலும் நியுட்ரோன் விண்மீனாகும் - இது ஒரு செக்கனுக்கு பல நூறுமுறை சுழலும்), மற்றையது குறைதிணிவு கொண்ட வெள்ளைக்குள்ளனாக மாறிக்கொண்டிருக்கும் விண்மீன்.

இந்தப் பிரதேசத்தில் இருந்துவந்த சக்திவாய்ந்த காமாக்கதிர் மற்றும் எக்ஸ்கதிர் மூலம் இந்த இடத்தில் ஒரு பல்சார் இருக்கிறது என்று தொலைநோக்கி தரவுகளை ஆய்வு செய்த விண்ணியலாளர்கள் கண்டுகொண்டனர். மேலும் அங்கிருந்துவரும் கட்புலனாகும் ஒளியை ஆய்வு செய்தபோது ஒளியலை நீலத்தில் இருந்து சிவப்பிற்கு மாறுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எம்மை நோக்கி வரும் வான்பொருள் நீலமாகவும், எம்மை விட்டு விலகிச் செல்லும் வான்பொருள் சிவப்பாகவும் தென்படும் - இது 'டாப்ளர் விளைவு' எனப்படும். இந்த நுட்பத்தைக்கொண்டு தான் பல்சாரைச் சுற்றி ஒரு வெள்ளைக்குள்ளன் சுற்றிவருகிறார் என்று ஆல்வாளர்கள் முடிவுக்கும் வந்தனர்.

வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன் சூரியனை ஒத்த அல்லது திணிவு குறைந்த விண்மீன் ஒன்று இறக்கும் போது எச்சமாக உருவாகும். சூரியனைப் போன்ற விண்மீன் ஒன்றில் இருக்கும் ஹைட்ரோஜன் வாயு முடியும் வேளையில் தொடர்ச்சியான அணுக்கருப்பினைவை நடத்துவதற்கு தன்னிடம் இருக்கும் ஹீலியத்தை பயன்படுத்தும். இக்காலத்தில் விண்மீனின் வெளிப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து சிவப்பு அரக்கனாக மாற்றமடையும். அதேவேளை விண்மீனின் மையப்பகுதி சுருங்கி கொஞ்சம் கொஞ்சமாக அணுக்கரு இணைவுப் பொறிமுறை முற்றாக நிறைவடையும் போது வெள்ளைக்குள்ளனாக, அண்ணளவாக பூமியின் அளவில் மாற்றமடைந்துவிடும். இதன் வெப்பநிலை 100,000 பாகை செல்சியசைவிடக் கூடுதலாக இருக்கும். 4FGL J1120.0-2204 இல் இருக்கும் வெள்ளைக் குள்ளன் இந்த நிலையை அடைய இன்னும் இரண்டு பில்லியன் ஆண்டுகள் எடுக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மில்லிசெக்கன் பல்சார்கள் அண்ணளவாக பத்து மில்லிசெக்கன்களுக்கு ஒருமுறை சுழலும் - எனவே இவை ஒரு செக்கனிலேயே பல நூறு முறை சுழலக்கூடியவை! இதற்க்கான சக்தி அருகில் இருக்கும் விண்மீன்களை கபளீகரம் செய்வதில் இருந்து கிடைக்கிறது. நமது சிலந்தித் தொகுதியில் பல்சாருக்கான உணவு அந்த வெள்ளைக்குள்ளனாக மாறிக்கொண்டிருக்கும் விண்மீன் தான். பல்சார் புயல் அருகில் இருக்கும் விண்மீனின் வாயுக்களில் உரசும் போது சக்திவாய்ந்த காமாக்கதிர்கள், எக்ஸ்கத்ர்வீச்சு உருவாகும்.

இந்தப் புதிய 'சிலந்தி' வகை இரட்டைவிண்மீன் தொகுதியின் கண்டுபிடிப்பு இரட்டைவிண்மீன் தொகுதிகள் எப்படி உருவாகின்றன என்று நாம் அறிந்துகொள்ள மிகவும் உதவும்.

படம்: ஓவியரின் கைவண்ணத்தில் இந்த இரட்டைவிண்மீன் தொகுதி. பெரும் விண்மீன் - வெள்ளைக்குள்ளன், சிறிய விண்மீன் - மில்லிசெக்கன் பல்சார்

Credits: NOIRLab/NSF/AURA/J. da Silva/Spaceengine. Acknowledgment: M. Zamani (NSF's NOIRLab)

ஆர்வக்குறிப்பு

நாமிதுவரை 80 குறைதிணிவு கொண்ட வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்களை அவதானித்துள்ளோம். ஆனால் ஒரு பல்சாரை (நியுட்ரோன் விண்மீன்) சுற்றிவரும் வெள்ளைக்குள்ளனை அவதானிப்பது இதுவே முதன்முறை. விண்ணியலாளர் வில்லமினா பிளம்மிங்கின் குழுவே 1910 இல் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்களை முதன்முதலில் அவதானித்து. 1967 இல் விண்ணியலாளர் ஜாக்லின் பெல் பெர்னால் முதன்முதலில் பல்சார் வகை விண்மீனைக் கண்டறிந்தார்.

This Space Scoop is based on a Press Release from NOIRLab .
NOIRLab

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்