அசூர பல்சாரின் மர்மம்
23 செப்டம்பர், 2016

காமிக்ஸ்புக் உலகமான மார்வல் யுனிவெர்ஸ்ஸில் வரும் ஒரு சிறந்த கதாப்பாத்திரம் J.A.R.V.I.S ஆகும். ஜானி ஸ்டார்க்கின் (அயர்ன் மேன்) வீட்டு சுப்பர் கணணி இந்த ஜார்விஸ். J.A.R.V.I.S ஸ்டார்க் வீட்டின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது முதல், அயர்ன் மேனின் பறக்கும் கவசத்தை கட்டுப்படுத்துவது வரை இவரின் வேலைதான்.

துரதிஷ்டவசமாக, J.A.R.V.I.S உண்மையாக இல்லை, ஆனால் சுப்பர்கணனிகள் உண்மை, அவற்றை பல்வேறுபட்ட அற்புதமான வேலைகளை செய்யப்பயன்படுத்துகிறோம். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்று சுப்பர்கணனிகள் எமக்கு உருவகப்படுத்தி காட்டியுள்ளது! எப்படி இந்தப் பிரபஞ்சம் அழியும் எனவும் நாம் சுப்பர்கணணிகளை பயன்படுத்தி கணக்கிட்டுப் பார்த்திருக்கிறோம்.

இந்த மாதத்தில், ஆய்வாளர்கள் சுப்பர்கணணியை பயன்படுத்தி இரண்டுவருட புதிர் ஒன்றை தீர்த்துள்ளனர்: அசூர பல்சாரின் மர்மம்.

2014 இல் விண்வெளித் தொலைநோக்கி மூலம் விண்ணியலாளர்கள் எதிர்பாராத மின்னிக்கொண்டிருக்கும் சிக்னல்களை அவதானித்தனர். அது ஒரு பசிமிக்க கருந்துளையில் இருந்து வரும் சிக்னல் எனக் கருதப்பட்டது. (எம்மைப் போலலாமல் கருந்துளைகள் அவற்றுக்கு அருகில் செல்லும் அனைத்தையும் விழுங்கிவிடும், கோள்கள், விண்மீன்கள் உட்பட)

பொதுவாக கருந்துளைகள் கட்புலனாகாதவை, ஆனால் அவற்றுக்கு அருகில் செல்லும் பொருட்களை அவை மிக வேகமாக ஈர்ப்பதால், அந்தப் பொருட்கள் உராய்வின் காரணமாக வெப்பமடைந்து ஒளிரத்தொடங்குகின்றன. இரண்டு மரக்கட்டைகளை வேகமாக உராய்ந்து நெருப்பை ஏற்படுத்துவது போல.

ஒரு கருந்துளை எவ்வளவு அதிகமான பொருட்களை ஈர்த்து கபளீகரம் செய்கிறதோ, அந்தளவுக்கு பிரகாசம் அதனைச் சுற்றி அதிகரிக்கும்... ஒரு எல்லைவரை. காரணம் அளவுக்கதிகமாக பொருட்கள் கருந்துளைக்குள் விழும் போது போக்குவரத்து நெரிசல் போன்ற ஒரு நிலை அங்கும் உருவாகும். இது எவ்வளவு பொருள் கருந்துளையினுள் விழும் என்பதனைக் கட்டுப்படுத்தும்.

ஆனால், கருந்துளைகளுக்கு அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை உண்டு, எனவே இந்த போக்குவரத்து நெரிசலையும் தாண்டி அது கபளீகரம் செய்யத்தொடங்கும் சந்தர்பங்களும் உண்டு. அப்போது பிரகாசம் மேலும் அதிகரிக்கும். 2014 இல் கண்டறியப்பட்ட அந்த மின்னும் பொருள், 10 மில்லியன் சூரியன்களைவிட பிரகாசமாக மின்னியது.

நீண்ட காலத்திற்கு, கருந்துளை போன்ற பிரபஞ்ச ஜாம்பவான்கள் மட்டுமே இப்படியாக நெரிசலையும் மீறி பிரகாசமடைந்து மீயுயர் பிரகாசமான எக்ஸ்கதிர் மூலங்களாக (super bright x-ray sources, called ULXs) மாறும் என்று கருதப்பட்டது. ஆனால், கருந்துளைகள் மின்னுவது இல்லை, ஆகவே இந்த மர்மமான பொருள் என்ன?

இங்குதான் சுப்பர்கணனிகள் வருகின்றன. விண்ணியலாளர்களால் இந்த ULX ஐ சென்று பார்க்கமுடியாது காரணம் அது 12 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. மாறாக விண்ணியலாளர்கள், இந்த ULX ஐ சுப்பர்கணனியில் மாடலாக மாற்றி உருவகப்படுத்தி ஆய்வுகளை செய்தனர்.

சுப்பர்கணணி மூலம் செய்யப்பட்ட உருவக ஆய்வுகள் மூலம், இந்த மர்மப் பொருள், பால்சார் எனப்படும் பிரகாசமான மின்னும் விண்மீன் வகையாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவற்றாலும் மேலே கூறப்பட்ட போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆர்வக்குறிப்பு

உலகில் இருக்கும் மிக வேகமான சுப்பர்கணணி சீனாவின் TaihuLight ஆகும். இதனால் ஒரு செக்கனுக்கு 93 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை செய்யமுடியும்! நமது சாதாரண கணனிகள் செக்கனுக்கு ஒரு பில்லியன் கணிப்பீடுகளை செய்யும் போது, இந்த சுப்பர்கணணி 93 மில்லியன் பில்லியன் மடங்கு வேகமாக தொழிற்படும்!

This Space Scoop is based on a Press Release from NAOJ .
NAOJ

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்