ஒரு பொருளின் திணிவு அதிகரிக்க அதன் ஈர்ப்புவிசையும் அதிகரிக்கும். இதனால்தான் நிலவின் ஈர்ப்புவிசையை விட பூமியின் ஈர்ப்புவிசை அதிகமாக உள்ளது, இதன் காரணமாக விண்வெளி வீரர்கள் நிலவில் அதிக உயரத்திற்கு பாயமுடியும்!
நாம் அடிக்கடி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு பெரியவை அல்லது பெருந்திணிவானது என்று பேசுகிறோம், ஆனால் இந்தப் பெரியது என்று கருதுவது எவ்வளவு பெரியது?
பொதுவாகவே நாம் பெருந்திணிவு என்று கூறும் போது அதன் அளவைக் கருத்தில் கொண்டு அப்படி கூறுவதில்லை. திணிவு என்பது ஒரு பொருள் கொண்டுள்ள வஸ்தின் அளவு எனலாம். உங்கள் தலையளவு இருக்கும் பஞ்சு மிட்டாய் நிச்சயமாக சாக்லெட்பார் ஒன்றை விடப்பெரியதுதான், ஆனால் சாக்லெட்பாருடன் ஒப்பிடும் போது பஞ்சு மிட்டாயில் குறைந்தளவு ‘வாஸ்தே’ காணப்படுகிறது, எனவே சாக்லெட்பாரை விட பஞ்சு மிட்டாய் குறைந்தளவு திணிவானது. பஞ்சு மிட்டாயை கைகளுக்குள் வைத்து நெருக்கிப்பாருங்கள் அது எவ்வளவு சிறிதாக மாறும் என்று தெரியும்!
தொலைவில் இருக்கும் பிரபஞ்சப் பகுதியில் இருக்கும் சுமார் 50 பெரும் திணிவுக் கருந்துளைகளை விண்ணியலாளர்கள் அளவிட்டுள்ளனர். அதிலிருந்து தெரியவந்ததாவது ஒவ்வொரு கருந்துளையும் நமது சூரியனை விட ஐந்து மில்லியன் மடங்குக்கும் அதிகமாக திணிவைக் கொண்டுள்ளன!
தொலைவில் இருக்கும் அதிகளவான கருந்துளைகளின் திணிவு நேரடியாக அளக்கப்படுவது இதுதான் முதன்முறையாகும். இதற்குக் காரணம் கருந்துளைகளை நேரடியாக அவதானிப்பது மிகக்கடினமான விடையம்.
பெரும்பாலான தொலைநோக்கிகள் ஒளியை அளக்கின்றன, ஆனால் கருந்துளைகளின் அதிவீரியமான ஈர்ப்புவிசை அதன் கட்டுக்குள் இருந்து ஒளியை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. இதன்காரணமாக கருந்துளைகள் எமது தொலைநோக்கிகளில் அகப்படுவதில்லை, எனவே விஞ்ஞானிகள் ஆக்கபூர்வமாக செயற்பட்டே கருந்துளைகளைப் பற்றி படிக்கவேண்டியுள்ளது.
கருந்துளைகளை அளப்பதற்கு ஒரு குறித்த பொருளின் பிரகாசத்தை கண்டறிவதற்கான தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். அதாவது கருந்துளையைச் சுற்றிக் காணப்படும் வாயுக்கள், தூசு துணிக்கைகள் ஆகியவற்றின் பிரகாசத்தை கருந்துளைக்கு அப்பால் இருக்கும் வாயுக்கள், தூசு துணிக்கைகளின் பிரகாசத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதே இந்த நுட்பம்.
ஒரு பொருளுக்கு அருகில் இருக்கும் பொருளின் பிரகாசத்தை மாற்றமடையச் செய்யும் எந்தவொரு பொருளும், அதற்கு சற்றே தொலைவில் இருக்கும் பொருட்களின் பிரகாசத்தையும் மாற்றமடையச் செய்யும், ஆனால் சிறிய நேர இடைவெளியின் பின்னர். இந்த நேர இடைவெளியை அளப்பதன் மூலம் குறித்த வாயுக்கள் கருந்துளையில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று விண்ணியலாளர்கள் கண்டறிகின்றனர். இந்தப் பெரும்திணிவுக் கருந்துளைகளை நேரடியாக பார்க்க முடியாவிடினும், இந்தத் தரவைக் கொண்டு கருந்துளையின் திணிவை அளக்கின்றனர்!
ஒரு பொருளின் திணிவு அதிகரிக்க அதன் ஈர்ப்புவிசையும் அதிகரிக்கும். இதனால்தான் நிலவின் ஈர்ப்புவிசையை விட பூமியின் ஈர்ப்புவிசை அதிகமாக உள்ளது, இதன் காரணமாக விண்வெளி வீரர்கள் நிலவில் அதிக உயரத்திற்கு பாயமுடியும்!
M Sri Saravana, UNAWE Sri Lanka