K2-25b கோளை பொறுத்தவரை ஒரு வருடம் என்பது மிக குறைவான காலமே. இந்தக் கோள் அதன் விண்மீனை வெறும் 3.5 பூமி நாட்களில் சுற்றிவருகிறது!
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்கள் பல நிறங்களிலும் அளவுகளிலும் மற்றும் பல்வேறுபட்ட பண்புகளோடு காணப்பட்டாலும், வெகு சில கோள்கள் புதிராகவும், புதினமாகவும் இருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது.
தேசிய விஞ்ஞான நிறுவகத்தின் NORILab தொலைநோக்கி கண்டறிந்துள்ள கோள் இதுவரை ஒரு கோள் என்றால் எப்படி இருக்கும் என்று விண்ணியலாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்துள்ளது எனலாம்.
K2-25b ஐ சந்திக்கலாம் வாருங்கள்
2016 இல் விண்ணியலாளர்கள் K2-25b எனும் இளமையான பிறவின்மீன் கோள் ஒன்றை கண்டறிந்தனர். ஹேடிஸ் விண்மீன் கொத்தில் இருக்கும் ஒரு இளமையான விண்மீனை இந்தக் கோள் சுற்றிவருகிறது. பூமியில் இருந்து 150 ஒளியாண்டுகள் இருக்கும் இந்தத் தொகுதி வெறும் 600 மில்லியன் ஆண்டுகளே வயதானது.
K2-25b சுற்றிவருவது M வகை குறள் விண்மீனாகும். இவ்வகையான விண்மீன்களே நமது பால்வீதியில் இருக்கும் பெரும்பாலான விண்மீன் வகையாகும்.
அபூர்வமான கண்டுபிடிப்பு
ஏனைய கோள்களுடன் ஒப்பிடும் போது இந்தக் கோள் எப்படி மாறுபடுகிறது என்றால், இதன் அடர்த்தியானது இதன் அளவு மற்றும் வயது ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, ஆச்சரியமாக மிக மிக அதிகமாக இருக்கிறது.
K2-25b பூமியைப் போல 25 மடங்கு திணிவைக் கொண்டிருப்பதுடன், நமது நெப்டியூன் அளவைவிட சற்றே சிறிதாக இருக்கிறது. இந்த முரண்பாடுதான் விண்ணியலாளர்கள் கோள்கள் உருவாவது பற்றிக் கொண்டிருக்கும் கருதுகோளை அசைத்துப் பார்க்கிறது.
பூமியின் அளவிற்கும் நெப்டியுனின் அளவிற்கும் இடப்பட்டளவில் பெரும்பாலான கோள்கள் நமது பால்வீதியில் அதிகளவில் இருக்கிறது. இருந்தாலும், நமது சூரியத் தொகுதியில் இப்படியான ஒரு கோள் இல்லை. இப்படிப்பட்ட கோள்கள் எப்படி உருவாகின்றன என்று விண்ணியலாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
தொடரும் புதிர்
K2-25b அளவுள்ள கோள்கள் பெரும்பாலும் வாயு அரக்கர்களாகவே இருக்கும் (நமது வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுறேனஸ் போன்றவை).
ஆனால், K2-25b முழுதும் பாறையால் உருவான கோளாகும். இதனாலேயே இதன் அடர்த்தி அதிகமான இருக்கிறது. இது ஒரு புதிராகவே இருக்கிறது.
எப்படி இந்தக் கோள் உருவானது மற்றும் இப்படியான கோள்கள் உருவாக காரணமாக இருக்கும் காரணிகள் என்னவென்று விண்ணியலாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
படவுதவி: NOIRLab/NSF/AURA/J. Pollard
K2-25b கோளை பொறுத்தவரை ஒரு வருடம் என்பது மிக குறைவான காலமே. இந்தக் கோள் அதன் விண்மீனை வெறும் 3.5 பூமி நாட்களில் சுற்றிவருகிறது!
M Srisaravana, UNAWE Sri Lanka