நாம் எங்கிருக்கிறோம்?
27 நவம்பர், 2020

முன்பின் அறியாத வீதிகளையும் இடங்களையும் இலகுவாக கடப்பதற்கு கூகிள் மாப்ஸ் வரைபடங்களை நாம் பயன்படுத்துவது போலவே, விண்ணியலாளர்கள் இந்தப் பிரபஞ்சவெளிக்கும் பல வரைபடங்களை உருவாக்கியுள்ளனர்.

ஜப்பானில் பல பகுதிகளில் இருக்கும் தொலைநோக்கிகளை கொண்டு இந்தப் பால்வீதியில் நமது சூரியத் தொகுதி எங்கிருக்கிறது என்று துல்லியமாக விண்ணியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். (அதோடு சேர்த்து பால்வீதியின் மையத்தில் இருக்கும் கருந்துளையின் அமைவிடத்தையும் துல்லியமாக கணக்கிட்டுள்ளனர்.)

பெரும் தொலைநோக்கிகள், துல்லியமான அளவீடுகள்

நமது சூரியத் தொகுதி பால்வீதியினுள்ளே இருப்பதால் எம்மால் பால்வீதிக்கு வெளியே சென்று பால்வீதி எப்படியிருக்கும் என்று பார்க்கமுடியாது. எனவே துல்லியமான அளவீடுகள், மற்றும் பால்வீதின் கட்டமைப்புகளின் வேகம் என்பவற்றை துல்லியமாக அளப்பதன் மூலம் பால்வீதியின் முழு கட்டமைப்பை பற்றி தெரிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்.

ஜப்பானின் தேசிய விண்வெளி அவதானிப்பகம் இயக்கும் VERA தொலைநோக்கி, குறுக்கீட்டுமானம் எனப்படும் விசேட உத்தியை பயன்படுத்தி விண்வெளியை ஆய்வுசெய்கிறது. ஜப்பானில் பல பகுதிகளில் இருக்கும் ரேடியோ தொலைநோக்கிகளிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஒன்று சேர்த்து ஒரு பெரும் இராட்சத தொலைநோக்கியை கொண்டு அவதானிப்பதற்கு ஒத்த வெளியிட்டை குறுகீட்டுமான நுட்பம் மூலம் உருவாக்கமுடியும்.

புதிய விடைகள்

VERA தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட வரைபடத்தைக் கொண்டு பால்வீதியின் மையத்தை விண்ணியலாளர்கள் துல்லியமாக கணக்கிட்டுள்ளனர். பூமியில் இருந்து 25,800 ஒளியாண்டுகள் தொலைவில் நமது பால்வீதியின் மையமும் அதிலிருக்கும் கருந்துளையும் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய கணக்கீடான 27,700 ஒளியாண்டுகளுடன் (1985 இல் இருந்து) ஒப்பிடும்போது தற்போதைய அளவீடு பால்வீதியின் மையம் அருகில் இருப்பதை காட்டுகிறது. மேலும் பால்வீதியின் மையத்தை நமது பூமி/சூரியத் தொகுதி செக்கனுக்கு 227 கிமீ வேகத்தில் சுற்றிவருவதையும் இவர்கள் கணக்கிட்டுள்ளனர். இதுவும் இதற்கு முன்னர் விண்ணியலாளர்கள் கணக்கிட்டதைவிட அதிகமாகும். இவ்வேகம் மின்னலின் வேகத்தைப் போல சுமார் இரண்டரை மடங்கு அதிகமாகும்!

ஏற்கனவே அளவிடப்பட்டதை விட பூமி மையத்திற்கு அருகில் இருப்பதால் நாம் கருந்துளையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை, எனவே பயப்படவேண்டிய அவசியமில்லை! இந்தப் புதிய அளவீடுகள் எமக்கு பால்வீதியைப் பற்றிய துல்லியமான வரைபடத்தை உருவாக்க உதவியுள்ளது என்பதே உண்மை.

VERA தொலைநோக்கித் திட்டம் பால்வீதில் இருக்கும் மேலும் பல விண்பொருட்களையும் அவற்றின் வேகம் என்பவற்றை ஆய்வு செய்ய ஆயத்தமாகிறது. குறிப்பாக பால்வீதியின் மையத்தில் இருக்கும் கருந்துளைக்கு மிக அருகில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்வது இவர்களது அடுத்தகட்டத் திட்டம். இதன் மூலம் மேலும் துல்லியமான வரைபடத்தை உருவாக்கமுடியும் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.

படவுதவி: NASA/JPL-Caltech/ESO/R. Hurt

ஆர்வக்குறிப்பு

நிலவில் அமெரிக்க நாணயம் ஒன்றை வைத்தாலும் பூமியில் இருந்து அதனை அவதானிக்ககூடிய துல்லியத்தன்ன்மை கொண்டது VERA தொலைநோக்கி.

This Space Scoop is based on a Press Release from NAOJ .
NAOJ

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்