எக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்
10 அக்டோபர், 2016

எக்ஸ் கதிர்கள், எம்மால் சாதரணமாக பார்க்கமுடிந்த ஒளியின் சக்தி கூடிய வடிவமாகும். எக்ஸ் கதிர்களால் சாதாரண ஒளியால் பயணிக்க முடியாத ஊடகங்களுக்குள்ளும் பயணிக்க முடியும், உதாரணமாக மரம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றினூடாக. காரணம் எக்ஸ் கதிர் கூடியளவு சக்தியைக் கொண்டிருப்பதனால் ஆகும்.

எக்ஸ் கதிரின் ஊடறுத்துப் பயணிக்கும் பண்பு எமக்கு மிகவும் பயன்மிக்கது. உதாரணமாக, எக்ஸ் கதிர்களால் மனிதர்களின் தோலையும், சதையையும் ஊடறுத்துச் செல்லமுடியும், இதனால் மருத்துவர்களால், எலும்புகளை பார்வையிடக்கூடியவாறு இருக்கிறது.

எக்ஸ் கதிர்கள் விண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பயன்படுகிறது. மருத்துவமனைகளில் எக்ஸ் கதிர்ப் படங்கள் எமது எலும்புகளின் நிழலைக் காட்டுகிறது அல்லவா; விண்ணியலில் நாம் எக்ஸ் கதிர்களை வெளியிடும் பொருட்களை படம்பிடிக்கிறோம்.

மேலே உள்ள படம் புளுட்டோவைக் காட்டுகிறது. புளுட்டோ நமது சூரியத் தொகுதியின் வெளிப்புற எல்லையில் இருக்கும் ஒரு குறள்கோளாகும். இடப்பக்கம் உள்ள படம், புளுட்டோ சாதாரண ஒளியில் தெரிவதைக் காட்டுகிறது. வலப்பக்கம் உள்ள நீல நிறக் குமிழ் போன்ற அமைப்பு புளுட்டோவில் இருந்துவரும் எக்ஸ் கதிரைக் காட்டுகிறது.

உண்மையில் இது எமக்கு ஆச்சரியமான விடயம், காரணம் புளுட்டோ போன்ற பாறையால் ஆன குளிரான சிறுகோள் இவ்வளவு சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்வீச்சை வெளியிடமுடியாது. விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் சூரியன் என்று கருதுகின்றனர்.

சூரியன் வெறும் ஒளியையும், வெப்பத்தையும் மட்டும் வெளியிடவில்லை. அவற்றோடு சேர்த்து பாரியளவு துணிக்கைகளையும் வெளியிடுகிறது (ஏற்றமுள்ள அணுக்கள்) இவை ஒரு கோளின் வளிமண்டலத்தினுள் நுழையும் போது அங்கே இருக்கும் அணுக்களுடன் தாக்கம் புரிந்து எக்ஸ் கதிர்களை உருவாக்குகிறது.

ஆனால் புளுட்டோ சூரியனில் இருந்து 6,000 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கிறது. இவ்வளவு தொலைவில் இருக்கும் புளுட்டோவை, சூரியனில் இருந்து போதுமான துணிக்கைகள் சென்று அடைவது சாத்தியமற்ற ஒன்று. அதனால் இவ்வளவு பிரகாசமான எக்ஸ் கதிர்வீச்சை உருவாக்கமுடியாது.

இந்தப் புதிருக்கு விடைகான மேலும் துல்லியமான புளுட்டோவின் எக்ஸ் கதிர் படம் எமக்கு வேண்டும். வால்வெள்ளிகளுக்கு இருப்பது போல நீளமான வால் போன்ற வாயுக் கட்டமைப்பு புளுட்டோவிற்கும் இருக்கலாம், இது இந்தப் பிரகாசமான எக்ஸ் கதிருக்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

ஆர்வக்குறிப்பு

புளுட்டோ பூமியில் இருந்து 6,000 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கிறது. ஒளிக்கு இந்தத் தூரத்தைக் கடப்பதற்கு 5 மணிநேரங்கள் எடுக்கிறது - இந்தப் படத்தில் இருக்கும் எக்ஸ் கதிர் உட்பட.

This Space Scoop is based on a Press Release from Chandra X-ray Observatory .
Chandra X-ray Observatory

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்