உலகங்களுக்கிடையில் ஒரு பாலம்
17 பிப்ரவரி, 2017

விண்வெளியில் இருக்கும் பொருட்கள் குழுவாகவே பயணிக்கின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றிவருகின்றன. கோள்கள் விண்மீன்களை சுற்றிவருகின்றன, இதனைப் போல விண்மீன் பேரடைகள் கூட சில சமயங்களில் ஒன்றையொன்று சுற்றிவரும்.

எமது விண்மீன் பேரடை, பால்வீதி (Milky Way) என அழைக்கப்படுகிறது. எண்ணிலடங்கா விண்மீன்கள், வாயுக்கள், தூசுகள் மற்றும் ஏனைய பொருட்களால் இது ஆக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 சிறிய விண்மீன் பேரடைகள் நமது பால்வீதியை சுற்றிவருகின்றன, ஆனாலும் இவற்றில் இரண்டை மட்டுமே தொலைநோக்கிகள் இல்லாமல் எம்மால் பார்க்க முடியும். இந்த இரண்டு பேரடைகளும் சிறிய மற்றும் பெரிய மகிலன் முகில்கள் (Magellanic Clouds) என அழைக்கப்படுகின்றன.

இவற்றை தொலைநோக்கிகள் இல்லாமல் பார்வையிடலாம் என்றாலும், மகிலன் முகில்களைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்வது கடினமான காரியமாகவே இருந்துள்ளது. இதற்குக் காரணம் இவை வானத்தில் பெரிய பகுதியில் விரிந்து காணப்படுகின்றன. ஒரு பெரிய கட்டடத்திற்கு அருகில் நின்றுகொண்டு அதனை இருகண் தொலைநோக்கி (binoculars) மூலம் பார்த்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், அப்போது உங்களுக்கு புரியும்.

தற்போதைய விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் தெளிவாக எம்மால் பிரபஞ்ச அயலவர்களை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து எமக்கு ஆச்சரியமூட்டும் புதிய தகவல்களும் கிடைத்துள்ளன – இந்த இரண்டு விண்மீன் பேரடைகளும் ஒரு பெரிய பிரபஞ்சப் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

விண்மீன்களாலும் பிரபஞ்ச வாயுக்களாலும் உருவான இந்தப் பாலம் 43,000 ஒளியாண்டுகள் வானில் நீண்டு காணப்படுகிறது. (இது பெரிய மகிலன் முகிலின் அளவை விட நான்கு மடங்கிற்கும் அதிக நீளமானதாகும்!)

இந்தப் ‘பாலம்’ உண்மையிலேயே சிறிய மகிலன் முகிலில் இருந்து பெரிய மகிலன் முகிலால் பிரித்தெடுக்கப்பட்ட விண்மீன்களாகும். 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு சிறிய விண்மீன் பேரடைகளும் மிக அருகில் வந்தபோது இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கவேண்டும்.

மற்றும் மேலதிகமாக உள்ள விண்மீன்கள் பெரிய மகிலன் முகிலில் இருந்து எமது விண்மீன் பேரடையான பால்வீதி மூலம் சிதறடிக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கு சண்டையிட்டுக்கொள்ளும் போது பெற்றோர் அவர்களுக்கு பாடம் சொல்வது போல!

மேலே உள்ள படத்தில் வானத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த எல்லை வரை பெரிதாக வளைந்து காணப்படுவது எமது பால்வீதியாகும். அதற்கு அடியில் இந்த இரண்டு சிறிய பேரடைகளையும் நீங்கள் காணலாம். பிரகாசமான பெரிய குமிழாக தெரிவது பெரிய மகிலன் முகிலாகும், அதற்கு கீழே சிறிய குமிழாக தெரிவது சிறிய மகிலன் முகில்.

ஆர்வக்குறிப்பு

புதிய விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் இதற்கு முன்னர் நாம் கருதிய அளவை விட பெரிய மகிலன் முகில் நான்கு மடங்கு பெரியது என்று தற்போது தெரியவந்துள்ளது!

This Space Scoop is based on a Press Release from RAS .
RAS

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்