விண்கற்களில் ஒரு உசேன் போல்ட்
25 ஆகஸ்டு, 2021
சில நாட்களுக்கு முன்னர் விண்ணியலாளர்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்: இவர்கள் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு விண்கல்லை கண்டறிந்துள்ளனர். நாமறிந்து சூரியனுக்கு மிக அருகில் செல்லும் ‘விண்கல்’ இதுதான்.
சில்லியில் உள்ள Victor M. Blanco 4 மீட்டார் தொலைநோக்கி கட்டமைப்பில் இருக்கும் கரும்சக்தி கமெரா (Dark Energy Camera - DECam) கொண்டு சூரியனுக்கு வெறும் 20 மில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவரும் இந்த விண்கல்லை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் 113 நாட்களில் இது சூரியனை சுற்றிவருவதால், சூரியத் தொகுதியில் இருக்கும் மிகவேகமான விண்கல்லும் இதுதான்.
பூமியோடு ஒப்பிட்டால், பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறது, அதாவது 365 நாட்கள். மேலும் நாம் சூரியனில் இருந்து 150 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கிறோம். இந்த விண்கல் 2012 PH27 உடன் ஒப்பிட்டால் 7 மடங்கு தொலைவு!
இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் விண்ணியலாளர்கள் பால்வீதிக்கு அருகில் இருக்கும் 107 விண்மீன் பேரடைகளுக்கும் கரும் பொருளுக்கும் இருக்கும் தொடர்பை ஆய்வு செய்தனர். ஓய்வு நேரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிவரும் விண்கற்களை அவதானிக்க முற்பட்டபோதே எதேர்ச்சையாக 2021 PH27 விண்கல்லை இவர்கள் கண்டறிந்தனர்.
இவர்களது கண்டுபிடிப்பை உறுதிசெய்வதற்காக சில்லி, ஹவாய் மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் இருக்கும் தனிப்பட்ட ஆய்வுக்குழுக்கள் குறித்த ஒரு கிமீ விட்டம் கொண்ட விண்கல்லை அவதானித்து சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் இதுதான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இப்புதிய விண்கல்லை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனது பயணப்பாதை அவ்வளவு ஸ்திரமானதாக இல்லை என்று கருதுகின்றனர். எதிர்காலத்தில் இவ்விண்கல் புதன், வெள்ளி அல்லது சூரியனுடன் மோதுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அந்த நிகழ்விற்கும் இன்னும் சில பல மில்லியன் வருடங்கள் எடுக்கும்.
எங்கிருந்து இந்த விண்கல் உருவாகியிருக்கும் என்று உறுதியாக அறிந்துகொள்ள மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். மேலும் இப்படியான விண்கற்களைப் பற்றி ஆய்வுகள் செய்வது பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் விண்கற்களை பற்றி நாம் அறிந்துகொள்ள உதவும். ஏனென்றால் அவை பூமியுடன் மோதி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும். எனவே அவற்றை நாம் கண்காணிப்பதும் அவற்றின் கட்டமைப்பைப்பற்றி அறிந்துகொள்வதும் எமக்கு பெரிதும் உதவக்கூடும்.
படம்: ஓவியரின் கைவண்ணத்தில் புதன் கோளும் (கீழே), விண்கல்லும் (மேலே).
படவுதவி: CTIO/NOIRLab/NSF/AURA/J. da Silva (Spaceengine)
ஆர்வக்குறிப்பு
சூரியனுக்கு மிக அருகில் சுற்றிவரும் விண்கற்களை அவதானிக்க உகந்தநேரம் அந்திநேரமாகும். இக்காலப்பகுதியிலேயே புதன் மற்றும் வெள்ளியையும் தெளிவாக அவதானிக்கக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த 2021 PH27 சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனை சுற்றிவரும் 20 விண்கற்களில் ஒன்று. இவ்விண்கற்களை அட்ரிரா விண்கற்கள் என அழைக்கின்றனர்.
This Space Scoop is based on a Press Release from
NOIRLab
.
M Srisaravana, UNAWE Sri Lanka
படங்கள்
ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...
Space Scoop என்றால் என்ன?
விண்ணியல் பற்றி அறிய
புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்
Space Scoop நண்பர்கள்