செண்டராஸ் ஏ யின் அழகிய போஸ்!
1 செப்டம்பர், 2021
அண்ணளவாக 12 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் செண்டராஸ் ஏ விண்மீன் பேரடை நமக்கு மிக அருகில் இருக்கும் பேரடைகளில் ஒன்றாகும். அதனது அளப்பரிய தோற்றமும் பிரகாசமும் அதனை இலகுவாக ஆய்வு செய்வதற்கு எதுவாக இருக்கிறது. தென் அரைகோளத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் பெரிதும் ஆய்வு செய்யப்பட்ட பேரடை செண்டராஸ் ஏ ஆகும்.
விண்ணியலாளர்கள் குழு ஒன்று சில்லியில் உள்ள விக்டர் எம். பிளாங்கோ தொலைநோக்கியைக்கொண்டு அதில் பொருத்தியுள்ள கரும் சக்தி கமெராவை (Dark Energy Camera) வைப் பயன்படுத்தி நமது ‘பக்கத்துவீட்டு பங்காளியை‘ படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தில் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்களையும் அவற்றுக்கிடையில் கீற்றுகளாக நிரம்பியிருக்கும் கருமைநிறத் தூசுகளையும் நாம் பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் ஒரு பெரும் நீள்வட்ட விண்மீன் பேரடையும், சிறிய சுழல் விண்மீன் பேரடையும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு விண்மீன் பேரடையாக உருமாறியதால் ஏற்பட்ட விளைவே எங்கும் இழைகளாக கலந்திருக்கும் தூசுக்கு காரணம். ஆனாலும், செண்டாராஸ் ஏ வெறும் தூசும், விண்மீன்களும் மட்டுமே கொண்டதல்ல. இங்கு புதிதாக விண்மீன் பிறக்கும் இடங்களுக்கும் உண்டு! இவற்றை எம்மால் படத்தில் பார்க்ககூடியவாறு இருக்கிறது. பிரகாசமான சிவப்புப் புள்ளிகள் ஹைட்ரோஜன் நிரம்பிய விண்மீன் நாற்றுமேடைகளாகும். பேரடையின் இரண்டு பக்கங்களிலும் புதிதாக பிறந்துள்ள விண்மீன்களை நீங்கள் அவதானிக்கலாம். அவை நீல நிற முகில்கள் போல தென்படுகின்றன.
570 மெகாபிக்சல் தெளிவு கொண்ட கரும் சக்தி கமெரா உலகில் உள்ள சக்திவாய்ந்த கமேரக்களில் ஒன்று (நமது செல்போன்களில் உள்ள கமேரவைப் போல 50 மடங்கு அதிக மெகாபிக்சல் கொண்டது!). நாம்இங்கே படத்தில் காண்பது வெறும் 10 மெகாபிக்சல் அளவுகொண்ட சிறு துண்டை மட்டுமே!
படவுதவி: CTIO/NOIRLab/DOE/NSF/AURA. Acknowledgments: PI: M. Soraisam (University of Illinois at Urbana-Champaign/NSF's NOIRLab). Image processing: T.A. Rector (University of Alaska Anchorage/NSF’s NOIRLab), M. Zamani (NSF’s NOIRLab) & D. de Martin (NSF’s NOIRLab)
ஆர்வக்குறிப்பு
‘செண்டராஸ் ஏ’யை பைனாகுலர் மற்றும் தொலைநோக்கிகளைக் கொண்டு அவதானிக்கலாம். தென்அரைக்கோளத்தில் தெளிவாக அவதானிக்ககூடிய விண்பொருட்களில் இதுவும் ஒன்று. அழகான வண்ணமயமான விண்மீன்களையும், தூசுமண்டலங்களையும் தவிர, இதன் மையத்தில் பெரும் திணிவுக் கருந்துளை ஒன்றும் இருக்கிறது.
This Space Scoop is based on a Press Release from
NOIRLab
.
M Srisaravana, UNAWE Srilanka
படங்கள்
ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...
Space Scoop என்றால் என்ன?
விண்ணியல் பற்றி அறிய
புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்
Space Scoop நண்பர்கள்